$30,000 செலவில், வளர்ப்பு நாயை உறைய வைத்தவர்

Cryonics என்ற முறையில் மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைய வைத்து உங்கள் செல்லப் பிராணியை அதன் அழிவிலிருந்து பாதுகாக்கலாம் என்று தற்போதைய விஞ்ஞானம் உறுதியளிக்கிறது. நாயின் உரிமையாளர்கள் பலர் அந்த சேவையை தங்கள் செல்லப் பிராணிக்கு செய்கிறார்கள். ஆனால், ஒரு மிருகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? $30,000 செலவில், வளர்ப்பு நாயை உறைய வைத்த இவர் அது ஒரு நாள் மீண்டும் உயிர்க்கும் என்று நம்புகிறார்.

Solemn man in a red shirt, caressing the head of a black-and-white dog

Dale Pearce had his dog, Neren, cryonically preserved. Source: Supplied / Dale Pearce

வாழ்க்கையில் சில விடயங்கள் நிச்சயமானவை. ஒருவர் (உங்கள் செல்லப்பிராணி உட்பட) இறக்கும் போது, அதற்காகத் துக்கப்படுத்துவது மனித இயல்பு. ஆனால் Dale Pearc என்பவர் தனது வளர்ப்பு நாய்க்குப் புற்றுநோய் வந்துள்ளது என்று கண்டறிந்தவுடன், அதன் வாழும் காலம் சில மாதங்கள் தான் என்பதை ஏற்க மறுத்தார்.

“ஒரு நாள் அவளை மீண்டும் அழைத்து வர முடியும் என்ற நம்பிக்கையில் என் நாயை உறைய வைத்தேன்” என்று அவர் SBS The Feedஇடம் கூறினார்.

“பல வருடங்கள் ஒன்றாக மகிழ்வாக வாழ்ந்த எனக்கு, இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னொரு வாய்ப்பு வேண்டும் என்று நான் நினைத்தேன்.”

Kelpie இன நாய் Neren பத்து வருடங்களாக Daleஇன் செல்லப்பிராணி. இருவரையும் பிரிக்க முடியாது. நாடு முழுவதும் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார்கள். இசை விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்குச் செல்வது அவர்கள் வழக்கம். ஒருமுறை Turbines என்ற திகில் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். தனது வாழ்க்கையை Neren பகிர்வதற்கு முன்னர், தான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தார். மனம் எதிலும் ஈடுபடவில்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் Neren என்னை வெளியே அழைத்துச் செல்லும்படி நச்சரிப்பது – எனக்குப் புத்துணர்வை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.
Black dog in a fluorescent orange vest sitting at the beach
Neren and Dale enjoyed going to the beach together. Source: Supplied / Dale Pearce
Neren கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார் என்ற செய்தி 2016 ஆம் ஆண்டில் கிடைத்தபோது Dale மனமுடைந்து போனார். Nerenனின் நுரையீரலில் புற்றுநோய் பரவியதாக கால்நடை மருத்துவர் சொன்னார்.

“Neren இறப்பதை நான் பார்க்க வேண்டி வரும் என்று எனக்குத் தெரியும்... ஆனால் நான் அதை விரும்பவில்லை,” என்று Dale கூறினார்.

இணைய வழியாகத் தான் என்ன செய்யலாம் என்று ஆராயத் தொடங்கினார்.

அப்போதுதான் அவர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, மக்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உடல்களைப் பாதுகாக்கும் Cryonics Institute என்ற நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொண்டார். இறந்தவர்கள் ஒரு நாள் உயிர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது.

Dale உடனே Nerenனுடன் அமெரிக்கா பயணமானார். அங்கு அவர் 20,000 அமெரிக்க டொலர்கள் (கிட்டத்தட்ட $30,000) செலுத்தி Neren உடலை ஆழமாக உறைய வைத்தார்.

தனது அன்பான நாயுடன், 2050 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் இணைவார் என்று Dale நம்புகிறார்.

“இந்த தொழில்நுட்பம் வேகமாக வளர்வதால், நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று Dale கூறினார்.

கிரியோனிக்ஸ் (Cryonics) என்றால் என்ன?

எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படலாம் என்ற நம்பிக்கையில், மிகக் குறைந்த வெப்பநிலையில் உடல்களைப் பாதுகாத்து வருகிறது கிரையோனிக்ஸ்.

ஒரு செல்லப்பிராணியைப் பாதுகாக்க:
  • விலங்கு ஒரு கால்நடை மருத்துவரால் கருணைக்கொலை செய்யப்பட்டு குளிர்விக்க பனியில் வைக்கப்படுகிறது
  • உடலில் இருந்து நீர் அகற்றப்பட்டு, உறைதல் தடுப்பியாக செயல்படும் ஒரு வேதிப்பொருள் உடலில் ஏற்றப்படுகிறது
  • உடல் மேலும் குளிர்ந்து, பின்னர் திரவ நைட்ரஜன் தொட்டியில் வைக்கப்படுகிறது
  • அங்கு அது, சுமார் -200 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் சேமிக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் மேம்படுவதால், உறைந்த செல்லப்பிராணிகளை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், நோயற்ற உடலாகவும் மீண்டும் உயிர்ப்பிக்கும் காலம் வரலாம் என்று கிரையோனிக்ஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Black dog in pink vest lying on the floor next a row of white cylindrical tanks
Neren visiting the cryostat (insulated tank) where she is now stored. Source: Supplied / Dale Pearce

உறைந்த நிலையிலுள்ள ஒரு செல்லப்பிராணியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? முடியுமா?

James Hiram Bedford என்ற அமெரிக்க உளவியல் பேராசிரியர், 1967ஆம் ஆண்டில் உறைய வைக்கப்பட்டதிலிருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இந்த செயல்முறை மூலம் உறைய வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை யாரும் மீண்டும் உயிர் திரும்பவில்லை.

கிரையோனிக்ஸ் வேலை செய்யுமா என்பதில் பல விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் உள்ளது.

“இந்தக் கட்டத்தில், cryonics வேலை செய்யுமா என்பதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை” என்று RMIT பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் Saffron Bryant கூறினார்.
Woman in a medical gown stares at a computer screen displaying human skin cells, as she adjusts a microscope
Saffron Bryant is a scientist who is doubtful cryonics will work. Source: SBS
தற்போதைய தொழில்நுட்பத்தில், சிவப்பு இரத்த அணுக்கள் போன்ற ஒற்றைக் கலன்களை (செல்களை) மட்டுமே குறைந்த வெப்பநிலையில் சேமிக்க முடியும் என்று அவர் கூறினார்.

“நாங்கள் திசுக்களை சேமிக்க முடியாது, உறுப்புகளை சேமிக்க முடியாது, மேலும் இந்த நேரத்தில் முழு உயிரினங்களையும் சேமிக்க முடியாது” என்று Saffron Bryant கூறினார்.

“உறைந்த நிலையில், பனிக்கட்டிகள் உருவாகி செல்கள் அழிந்து போகும். அதைத் தடுக்க சிறப்பு இரசாயனங்கள் சேர்க்கப்பட வேண்டும்” விளக்கினார் Saffron Bryant.

“சிக்கல் என்னவென்றால், நாங்கள் தற்போது பயன்படுத்தும் இந்த சிறப்பு இரசாயனங்கள் (cryoprotective agent) உண்மையில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது” என்று அவர் கூறினார்.
Rows of cryostats bathed in blue fluorescent lighting.
The Cryonics Institute is one of the largest cryonics companies in the world. Source: Supplied / Cryonics Institute
உடலில் உள்ள வெவ்வேறு செல்கள் வெவ்வேறு வெப்பநிலைகளில் குளிரடையவும் வெப்பமடையவும் செய்கின்றன.

செல்லப்பிராணிகளின் நோய்களுக்கான சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற கிரையோனிக்ஸ் கூற்றில் Saffron Bryantற்கு நம்பிக்கை இல்லை.

“யாராவது தொற்றுநோயால் இறந்தால், அவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது நல்லதல்ல. அது அவர்களுக்கு உதவாது,” என்கிறார் அவர்.

ஆஸ்திரேலியாவின் முதல் கிரியோனிக்ஸ் மையம்

நம் நாட்டிலும் செல்லப்பிராணியை உறைய வைக்கும் விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு நல்ல சேதி விரைவில் கிடைக்கவுள்ளது. தென் அரைக்கோளத்தில் முதல் கிரையோனிக்ஸ் வசதி, NSW மாநிலத்தின் தெற்குப் பகுதியிலுள்ள Holbrookஇல் ஒரு மையத்தை அமைத்துள்ளது.

செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க Southern Cryonics திட்டமிட்டுள்ளது என்று கூறிய அதன் இயக்குனர் Peter Tsolakides, “செல்லப்பிராணியின் நிலமையைப் பொறுத்து அதனை நாம் உறைய வைப்போம்" என்றார்.
Overhead view of a large warehouse under construction, with utes and cement mixer parked nearby
The Southern Cryonics facility in NSW has recently finished construction. Source: Supplied / Southern Cryonics
“செல்லப்பிராணிகளைப் பற்றி எங்களிடம் பலர் கேட்கிறார்கள்” என்று Peter Tsolakides கூறினார்.

“இதற்கான தேவை அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

கிரையோனிக்ஸ் மீது சந்தேகம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை வழங்குவதாக Peter Tsolakides கூறினார்.

“மாற்றாக அடக்கம் அல்லது தகனம் செய்தால், செல்லப்பிராணியை மீண்டும் பார்ர்கும் வாய்ப்பு அறவே இல்லை” என்று அவர் கூறினார்.

உங்கள் செல்லப்பிராணியை உறைய வைப்பது எவ்வளவு செலவாகும்?

Man kissing a black dog on the head beside a wire fence
Dale hopes to be reunited with his dog one day. Source: Supplied / Dale Pearce

“ஒரு மனிதனை உறைய வைக்க ஒன்றரை இலட்சம் டொலர்கள் வரை Southern Cryonics அறவிடும். செல்லப் பிராணிக்கான சரியான விலையை இதுவரை தீர்மானிக்கவில்லை, ஆனால் அது உடல் எடையின் அடிப்படையில் இருக்கும்” என்று Peter Tsolakides கூறினார்.

“ஒரு பூனை, ஐந்து முதல் ஐந்து முதல் ஆறு கிலோ வரை இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... பூனை ஒன்றை உறைய வைக்கத் தோராயமாக $10,000 ஆகும்” என்றார் அவர்.

“அதே வேளை, ஒரு பெரிய நாயாக இருந்தால், ஒரு மனிதனைப் போல பெரியதாக இருந்தால், மனிதருக்கு செலவாகும் அளவு நாய்க்கும் செலவாகும்.”

Dale தனது நாயை உறைய வைப்பதற்காக செலவழித்த பணத்தை சம்பாதிக்க சில வருடங்கள் ஆனது.

“Nerenனுக்காக நான் செலவு செய்வது குறித்து நான் வருத்தப்படவில்லை” என்று Dale கூறினார்.

“Neren திரும்பி வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று நான் நினைக்க விரும்புகிறேன்.”

ஒரு பூனையை உறைய வைக்கத் தோராயமாக $10,000 செலவாகும்
Peter Tsolakides




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Kulasegaram Sanchayan, Jennifer Luu
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand