மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பிலான கட்டுப்பாடுகளை மேலதிகமாக தளர்த்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இதனை ஓரிரு தினங்களுக்கு ஒத்திவைப்பதாக Premier Daniel Andrews அறிவித்துள்ளார்.
மெல்பேர்ன் வடக்கில் ஏற்பட்டுள்ள புதிய தொற்று பலருக்கு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், இதுகுறித்த சோதனை முடிவுகள் வெளியாகும்வரை மேலதிக கட்டுப்பாட்டு தளர்வுகளை ஒத்திவைப்பதாகவும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் புதிதாக 7 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் மெல்பேர்ன் வடக்கில் ஏற்பட்டுள்ள பரவலுடன் தொடர்புடையவர்கள். அதேநேரம் கோவிட் தொடர்பில் புதிதாக மரணங்கள் எவையும் பதிவாகவில்லை.
மெல்பேர்னின் 14 நாட்களுக்கான கொரோனா தொற்றுக்களின் மொத்த சராசரி 4.6 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் hospitality, retail உள்ளிட்ட துறைகளுக்கான கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த பின்னணியில் இதனை ஒத்திவைப்பது என்ற விக்டோரிய அரசின் முடிவை, விக்டோரிய வணிகங்கள், மாநில எதிர்க்கட்சி, ஆஸ்திரேலிய அரசு மற்றும் விக்டோரியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் Jenny Mikakos உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
