2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிகளவிலான இணையப்பாவனையை மேற்கொண்ட பிராந்தியம் Northern Territory என்று Telstra தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல், சராசரியாக வீடொன்றுக்கு 327.98GB என்ற வீதத்தில் Northern Territory-இல் இணையம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பாவனையில் இரண்டாம் இடத்தில் குயின்ஸ்லாந்தும் (316.19GB) மூன்றாம் இடத்தில் விக்டோரியாவும் (316.17GB) நான்காம் இடத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலமும் (286.38GB) காணப்படுகின்றன. தஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT ஆகியவை சராசரியாக வீடொன்றுக்கு 283GB ற்கும் கீழ் இணையத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள்/பிராந்தியங்கள் ரீதியாக ஒப்பிடுகின்றபோது Northern Territory வீட்டுப்பயனாளர்களின் இணைய பாவனை அதிகமாக உள்ளபோதும், "ஆஸ்திரேலியாவின் தரவிறக்க தலைநகர்" (Download Capital of Australia) என்று அழைக்கப்படுமளவுக்கு அதிகளவு தரவிறக்கங்களை ஒவ்வொரு வீடும் அதிகளவில் மேற்கொள்ளும் நகரமாக மெல்பேர்னில் Williams Landing அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வீடுகளிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால், இந்த இணைய பாவனை அதிகரித்திருக்கவில்லை என்றும் கூடுதல் இணைய பாவனைக்கான முக்கிய காரணம் இணைய விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்வதும், இணையத்தில் நேரடியாக விளையாடுவதுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
