ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால வீசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக் குடும்பம் பல காலமாக வாழ்ந்து வந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச் சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்ட நடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ண் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக் கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 21 அன்று மெல்பேர்ண் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக் குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக் குடும்பத்தின் மேன் முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த ஃபெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக் குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, உயர் நீதிமன்றில் இக் குடும்பம் தாக்கல் செய்திருந்த மனுவும் மே மாதம் 14ம் நாள் நிராகரிக்கப்பட்டது.
நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்து வந்த Biloela பகுதி மக்கள் இக் குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள போதும், இக் குடும்பத்திற்கு கருணை காட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்து வந்திருந்தார்.
இறுதியாக, கடந்த ஜூன் 12ம் நாள் குழந்தை தருணிக்காவின் பெயரில், உள்துறை அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை, அமைச்சரின் அதிகாரம் குறித்த அமைச்சரின் வழிகாட்டுதல்களுக்கு (s26A) எதிராக இந்தக் கோரிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்ப முடியாது என்று உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து குழந்தையும் நடேசலிங்கம்-பிரியா குடும்பமும் விரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

