பிரதமர் மல்க்கம் டர்ன்புள் கடந்த வருடம் தொலைபேசி வழியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து உரையாடியது ஞாபகம் இருக்கிறதா? அந்தத் தொலைபேசி அழைப்பில், எமது பிரதமர், "மனூஸ் தீவிலும் மற்றும் நவூருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகப்படியானோர் ஈரான், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து நல்வாழ்வைத் தேடி வந்த பொருளாதார அகதிகள்" என்று கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
படகு மூலம் புகலிடம் கோரி வந்த 1,250 பேரை மீள்குடியேற்றுவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அரசு அமெரிக்க அரசுடன் ஏற்படுத்தியிருந்தது. அந்த ஒப்பந்தம் தனக்கு ஒவ்வாதது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்ததாகவும் இந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
அத்துடன், எந்த ஒரு புகலிடக் கோரிக்கையாளரையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனக்கு அது ஏற்புடையதுதான் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேர்த் நகரில் நிருபர்கள் பிரதமரிடம் கேட்டதற்கு, "நான் எப்பொழுதும் ஆஸ்திரேலியாவின் நலன்களுக்காகவே செயற்படுகிறேன்" என்று கூறினார்.