பெர்த்தின் தனிமைப்படுத்தல் விடுதியில் ஏற்பட்ட கோவிட் பரவலின் ஆரம்பப்புள்ளியான- Patient Zero என்று அழைக்கப்படும் நபர் திருமண நிகழ்வுக்காக இந்தியாவுக்கு போய் வருவதற்கு விண்ணப்பித்து பயணத்தடை விதிவிலக்கு அளிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியானதையடுத்து இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் கோவிட் பரவல் பல மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படும் பின்னணியில் குறித்த நபருக்கு பயணத்தடை விதிவிலக்கு வழங்கப்பட்டமை ஆச்சரியத்தையளிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்
எத்தனையோ முக்கிய காரணங்களை முன்வைத்து, தங்களுக்கு பயணத்தடை விதிவிலக்களிக்குமாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையிடம் விண்ணப்பித்துவிட்டு, பல மாதங்களாக காத்திருக்கும் சூழ்நிலையில், இந்த நபர் கோவிட் பரவல் செறிவடைந்துள்ள இந்தியாவுக்கு, திருமண நிகழ்வுக்காக விதிவிலக்களிக்கப்பட்டு சென்று வந்துள்ளமை குறித்து, பலர் விசனமும் விமர்சனமும் எழுப்பியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பெர்த்திலுள்ள மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவித்தபோது - தான் திருமணம் செய்வதற்கு நிச்சயமாகியுள்ள பெண் தற்போது இந்தியாவிலிருப்பதாகவும் தங்களுடைய திருமண விசா ஆஸ்திரேலிய குடிவரத்துறையினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும் இருந்தாலும் இந்தியாவில் நிலவும் கோவிட் தொற்றினால் ஆஸ்திரேலிய அரசின் இறுக்கமான வெளிநாட்டு பயணத்தடையை மீறி தாங்கள் இருவரும் இணைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளார். தனது கடைசி தெரிவாக இந்தியாவுக்கு சென்று மருத்துவராக பணிபுரிவதை தான் யோசித்துவருவதாகவும் தனக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயம் என்ற ரீதியில் பயணத்தடை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கியிருந்த அறையிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு தங்கியிருந்த ஏனைய மூவருக்கு தொற்றை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் தனிமைப்படுத்தல் காலத்தில் இவர்கள் எவ்வித சுகாதார கட்டுப்பாடுகளையும் மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
