கர்தினால் ஜார்ஜ் பெல் மேன் முறையீட்டு வழக்கில் தோல்வி

கர்தினால் ஜார்ஜ் பெல்லின் (Cardinal George Pell) மேல்முறையீடு, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்.

குழந்தை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிறை சென்றிருக்கும் கத்தோலிக்க கர்தினால் ஜார்ஜ் பெல், அந்த முடிவிற்கு எதிராக தொடுத்த மேல்முறையீடு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்.

1996 ஆம் ஆண்டு, மெல்பேர்ண் நகரிலுள்ள புனித பத்ரீசியார் பேராலயத்தில் (St Patrick's Cathedral) 13 வயது சிறுவனைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் மற்றொருவரை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியமை என்று ஐந்து குற்றச்சாட்டுகளில், கடந்த டிசம்பர் மாதம் கர்தினால் ஜார்ஜ் பெல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

விக்டோரிய மானிலத்திலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், இவருடைய மேன் முறையீட்டின் மையப்பொருளை நிராகரித்தது. மூன்று நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே ஆதரவாக வாக்களிக்க, 2 -1 என்ற முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
audio-x-generic.png
Dutton's eligibility 'completely in doubt', says shadow attorney-general Mark Dreyfus

"நீதிமன்றங்கள் தங்கள் பணியைச் செய்துள்ளன" என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார்.

"தங்கள் தீர்ப்பை அவர்கள் வழங்கியுள்ளனர் ... இந் நாட்டின் நீதி அமைப்பு அதுதான், அது மதிக்கப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

கர்தினால் பெல்லுக்கு வழங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அதி உயர் விருதான Order of Australia விருது மீளப் பெறப்படும் என்று பிரதமர் கூறினார்.

“மேன் முறையீட்டில் தோல்வி கண்டிருப்பதால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது அவரிடமிருந்து மீளப் பெறப்படும் என்று தான் நான் நினைக்கிறேன்.”

முன்னாள் பிரதமர்கள் ஜான் ஹோவர்ட் (John Howard) மற்றும் டோனி அப்போட் (Tony Abbott) ஆகியோர் பெல்லைக் கண்டிக்க வேண்டிய நேரம் இதுதானா என்று கேட்டதற்கு, "அது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு” என்றார்.
தலைமை நீதிபதி ஆன் ஃபெர்ஃகசன் (Anne Ferguson) மற்றும் விக்டோரிய மாநில மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி கிறிஸ் மேக்ஸ்வெல் (Chris Maxwell) ஆகியோர் ஒத்த தீர்ப்பை வழங்கினார்கள்.  அதே வேளை, நீதிபதி மார்க் வெயின்பெர்க் (Mark Weinberg) பெல்லை விடுவிக்கலாம் என்று தீர்ப்புக் கூறினார்.

"விடுப்பு கோருவது தொடர்பாக மேல் முறையீடு செய்வதன் முதல் சுற்றில் கர்தினால் பெல் வெற்றி பெற்றிருந்தார் - இருப்பினும், பெரும்பான்மையாக, மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று தலைமை நீதிபதி ஃபெர்ஃகசன் கூறினார்.

"குற்றம் சுமத்தியவர் தெளிவாக தனது ஆதாரங்களை வெளிப்படுத்தியிருந்தார்.  அவர் ஒரு பொய்யர் அல்ல, ஒரு கற்பனையாளர் அல்ல, அவர் சத்தியத்தின் சாட்சி என்று அரசு தரப்பு சமர்ப்பித்ததை நீதிபதி மேக்ஸ்வெலும் நானும் ஏற்றுக் கொண்டோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
The complainant ... was clearly not a liar Chief Justice Anne Ferguson குற்றம் சுமத்தியவர்... தெளிவாக, ஒரு பொய்யர் அல்ல தலைமை நீதிபதி ஆன் ஃபெர்ஃகசன்
இதே வேளை, பெல்லை ஒரு "பலிக் கடா" என்று பார்க்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.  "கத்தோலிக்க திருச்சபையின் எந்த தவறுகளுக்கும் அவர் பலிக் கடாவாக இருக்கக்கூடாது, அத்துடன் மற்றைய மதகுருமார்கள் சிறுவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான எந்தவொரு தோல்விக்கும் இவர் காரணமல்ல."

 

பெல்லின் பணி "கனமானவை" மற்றும் "சிக்கலானவை" என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட “குற்றங்கள் இடம்பெற சாத்தியமில்லை” என்றும், இந்த மேன் முறையீட்டு வழக்கில் கர்தினால் பெல் சார்பாக வாதிட்ட சிட்னி வழக்குரைஞர் பாரிஸ்டர் பிரட் வாக்கர் (Brett Walker SC) வாதிட்டார்.

ஆனால், “கனமான, சிக்கலான பணியை செய்பவரும் குற்றமிழைக்கலாம் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்றார் தலைமை நீதிபதி ஆன் ஃபெர்ஃகசன்.

'ஒரு மகிழ்ச்சியான தருணம்'

இந்த தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்திற்கு வெளியே நின்றவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரப்பட்டார்கள்.

இது "ஒரு மகிழ்ச்சியான தருணம்" என்று, துன்புறுத்தலில் இருந்து தப்பியவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் கிறிஸி ஃபாஸ்டர் (Chrissie Foster) செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்த முடிவு, ‘பாதிக்கப்பட்டவர்கள் நம்பப்படுவார்கள்’ என்று ஒரு செய்தியை சொல்கிறது. இப்படியான குற்றங்களை நிரூபிப்பது கடினமாக உள்ளது, ஏனெனில் இது ஒருவருக்கு எதிராக மற்றொருவர் சொல்லும் வார்த்தை, யாரை நம்புவது என்று சொல்ல முடியாத நிலை” என்று அவர் கூறினார்.

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி கிடைக்க, பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் கிறிஸி ஃபாஸ்டர்.  அவரது இரண்டு மகள்கள் ஒரு கத்தோலிக்க பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர், அதில் ஒருவர் இறந்துவிட்டார்.

“இங்கே, இன்று, எங்கள் விக்டோரிய மாநில உச்ச நீதிமன்றம் சொல்கிறது – ‘பாதிக்கப்பட்டவரை நாங்கள் நம்புகிறோம்’ என்று.”
இந்தத் தீர்ப்பை மற்றையவர்களும் வரவேற்றுள்ளனர்.

" பாதிக்கப்பட்டவரை இந்த வழக்கில் நம்புவது, பல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறது, உங்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியமானது, முன்பை விட இப்போது நம்பப்படும் வாய்ப்பு அதிகம்" என்று ப்ளூ நாட் அறக்கட்டளையின் (Blue Knot Foundation) அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

“ஒரு சக்திவாய்ந்த, உயர் பதவியில் உள்ள ஒருவர் குற்றவாளி என நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்படுவது, நீதிச் செயல்முறையின் மீதான நம்பிக்கையையும், தம்மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து வெளியே பேசுவதற்கான சாத்தியத்தையும் பல தப்பிப்பிழைத்தவர்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.”

ஜூன் மாதம், தொடர்ந்து இரண்டு நாட்கள், பெல்லின் முறையீட்டை மூன்று நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பெல்லின் விடுதலையைப் பெறுவதற்கு அல்லது விசாரணை மீண்டும் நடத்தப்பட, மூன்று காரணங்களை வழக்குரைஞர் பாரிஸ்டர் பிரட் வாக்கர் வாதிட்டார்.  அதில், வழங்கப்பட்ட தீர்ப்பு “பாதுகாப்பற்றவை” மற்றும் “திருப்தியற்றவை” என்பதும் ஒன்று.

‘நன்னடத்தை காரணமாக விடுதலை வழங்கப்படாமல் குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் மற்றும் மொத்தமாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்ற தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்டது.
audio-x-generic.png


குற்றம் செய்ததாகக் கூறப்பட்டபோது, பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தின் மேற்கு வாசலில் நின்று, தொழுகைக்கு வந்தவர்களை கர்தினால் பெல் வழியனுப்பி வைத்தார் என்றும், எனவே அவர் "கொடூரமான" குற்றத்தைச் செய்திருக்க முடியாது என்றும் குற்றம் சுமத்தியவரின் கணக்கின் படி குற்றம் நடந்திருக்க இயற்பியல் விதி மற்றும் தர்க்கரீதியாக சாத்தியமற்றது என்றும் வழக்குரைஞர் வாக்கர் மேல்முறையீட்டில் தெரிவித்தார்.

பெல்லினால் பாதிக்கப்பட்டவர்களில் மற்றவர், போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால், 2014 ஆம் ஆண்டில் தனது 31 ஆவது வயதில், மரணித்துள்ளார்.

தனது மகனின் மரணம், அவரது பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புடையது எனக் கூறி, பாதிரியார் மற்றும் கத்தோலிக்க திருச்சபை மீது வழக்குத் தொடரும் தந்தை, பெல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலென்ன, இல்லாவிட்டாலென்ன இழப்பீடு கேட்டு தனது போராட்டத்தைத் தொடருவார் என்று நேற்று உறுதிப்படுத்தினார்.

இப்போது தனது 30 வயதில் வாழும் மற்றைய சிறுவன், கடந்த ஆண்டு நடந்த “பழைய பாணியிலான குறுக்கு விசாரணைகளில்” அமைதியாக, மற்றும் நம்பகமான சாட்சியகமாக பதிலளித்தார் என்று, மேல்முறையீட்டு நீதிபதிகளிடம் வாதாடிய வழக்குரைஞர் கிறிஸ் பாய்ஸ் (Chris Boyce QC) கூறினார்.

“அவர் சத்தியத்தின் சாட்சியாக இருந்தார்” என்று அவர் மேலும் கூறினார்.

சிறுவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்கள் அல்லது ஆதரவை நாடுபவர்கள் 1800 272 831 என்ற எண்ணில் Braveheartsஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது 1300 657 380 என்ற எண்ணில் Blue Knotஐ தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் 13 11 14 என்ற எண்ணில் Lifelineஐ தொடர்பு கொள்ளலாம்.


AAPயிலிருந்து மேலதிக செய்திகள் பெறப்பட்டன.



Share

4 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan, Nick Baker




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand