ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் சூடான காலநிலையை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில் அதிலிருந்து தப்புவதற்கு குளிரூட்டி(Air conditioner) மின்விசிறி(Fan) என பல சாதனங்களைப் பயன்படுத்துவோம்.
ஆனால் குளிருட்டி பயன்படுத்தும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சாதாரண மின்விசிறி மட்டுமே வீடுகளில் இருக்கக்கூடும்.
தற்போது நிலவும் சூட்டைத் தணிக்க மின்விசிறி போதுமானதல்ல என்று பலர் நினைக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில காலநிலையின் போது குளிரூட்டிகளை விடவும் மின்விசிறிகள் அதிக பலன்தருபவை என தெரிவிக்கப்படுகிறது. எப்படி என யோசிக்கிறீர்களா?
சிட்னி பல்கலைக்கழக மருத்துவ பீட thermoregulatory physiology இணைப் பேராசிரியர் Ollie Jay இதற்கான விளக்கத்தை பின்வருமாறு தருகிறார்.
“அதிகூடிய வெப்பநிலை நிலவும் வேளைகளில் மின்விசிறி மிகுந்த பலன் தருகிறது. எமது தோலுக்கு மேலாக குளிர் காற்றை விசிறுவதன் மூலம் உடலிலிருக்கும் வெப்பத்தை convection என்ற செயன்முறையூடாக வெளியேற்றுவதும் வியர்வையை விரைவாக காயவைப்பதுமே மின்விசிறியின் பணியாகும்.
வளிமண்டலத்தில் வெப்பநிலையின் அளவு 35 டிகிரி செல்சியஸைவிட அதிகமாகும் போது convection செயன்முறையினூடாக நமது உடல் வெப்பம் வெளியேற்றப்படும் செயற்பாடு நிறுத்தப்படுகின்றபோதிலும் வியர்வை காயும் வேகம் மிகவேகமாக நடைபெறுகின்றது.
மின்விசிறியின் செயற்றிறன் தொடர்பில் பெரும்பாலும் தவறான கருத்துக்களே பரப்பப்படுகின்றன. பெரிய சர்வதேச நிறுவனங்கள்கூட இத்தகைய கருத்தினையே கூறுகின்றன. குறிப்பாக உலக சுகாதார நிறுவனம் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை சென்றால் மின்விசிறியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறது. ஆனால் அது தவறு. 42 டிகிரி செல்சியஸில்கூட மின்விசிறி சிறப்பாக செயற்படுகின்றது என்பதை நாம் ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறோம்.
ஆனால் மின்விசிறியானது உலர்வான வெப்பநிலையின்போது மிகச்சிறந்த பலனைத்தருமா என்ற சந்தேகம் எழுப்பப்படுகின்றபோதிலும் humidity-ஈரப்பதனுடனான காலநிலைகளில் இது மிகவும் வினைத்திறன்மிக்கது.
குறிப்பாக குயின்ஸ்லாந்து, டார்வின் போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் மின்விசிறி மூலம் அதிக பலனடைய முடியும்.
எனவே குளிரூட்டி வசதி இல்லாதவர்கள் அது குறித்து கவலையடையாமல் வெப்பநிலை உயர்வு உலர்வுடன்கூடியதா அல்லது ஈரப்பதனுடனான வெப்பநிலையா என்பதைப் புரிந்து கொண்டு மின்விசிறி பயன்படுத்துவது சிறந்தது” - என thermoregulatory physiology இணைப் பேராசிரியர் Ollie Jay ஊக்குவித்துள்ளார்.
இதேவேளை இணைப்பேராசிரியர் Ollie Jay-இன் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள Royal Brisbane and Women's Hospital Emergency and Trauma Centre-இன் நிர்வாகி Sean Rothwell வெப்பநிலை கூடிய காலங்களில் மின்விசிறியைப் போல வேறெதுவும் பலன் தராது எனக் கூறியுள்ளார்.
தமது மருத்துவமனையில் அதிக வெப்பநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது குறித்த நோயாளிகள் மின்விசிறியைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
