இந்த வருட ஆரம்பத்தில் இருந்து, உலகை அச்சுறுத்தும் மிகக்கொடிய வைரஸாக கொரோனா வைரஸ் மாறியிருக்கிறது. இதற்கு தீர்வு தரக்கூடிய தடுப்பு மருந்தை இது வரை மருத்துவர்கள் கண்டறியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியுள்ளது. சுமார் 25,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, டிசம்பர் 30-ம் தேதி, சீன மருத்துவர் லீ வென்லியாங் (Dr Li Wenliang) தனது சக மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைவிடுத்தார். தன்னிடம் சிகிச்சை பெற வந்த கடல் உணவுகளை விற்பனை செய்யும் ஏழு உள்ளூர் வியாபாரிகள், புதிய வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சீன சமூக வலைத்தளத்தில் பதிந்தார். மேலும், நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் எச்சரித்தார்.
அவரது செய்தி, சீன வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. வதந்தியைப் பரப்பியதாக அவர்மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் அவரை நேரில் சென்று எச்சரித்தனர். அதற்கு சில வாரங்களின் பின்னரே லி வென்லியாங் எச்சரித்தது போல கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சீனா மட்டுமல்ல உலகமே சிக்கியது.
இதற்கிடையில், கடந்த 10ஆம் தேதி, இந்த வைரஸ் தொற்றிய நோயாளி எனத் தெரியாமல் ஒருவருக்கு சிகிச்சையளித்த லி வென்லியாங்கிற்கு, அதே வைரஸ் தொற்று நோய் பரவியது. அவர் பணியாற்றிய மருத்தவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் போக, இன்று அவர் உயிரிழந்தார்.
Share
