மருத்துவ தேவைகளை எதிர்நோக்கி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரவேண்டியுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்வதில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தொடர்ந்தும் கடும்போக்கை கடைப்பிடிப்பதாகவும் கடந்த ஜூலை மாதத்துக்கும் செப்டெம்பர் மாதத்துக்கும் இடையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 57 அகதி நோயாளிகளில் 12 பேரை மாத்திரமே அவர் ஆஸ்திரேலியா கொண்டுவருவதற்கு அங்கீகரித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்த ஆஸ்திரேலிய அகதிகள் மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படக்கூடிய வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்ட medevac சட்டத்தின் பிரகாரம், நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர் குழுவினால் உள்துறை அமைச்சிடம் பரிந்துரைக்கப்படும் அகதி நோயாளிகள், உள்துறை அமைச்சரினால் அனுமதியளிக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவர். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு குணமான பின்னர், அவர்கள் மீண்டும் மானுஸ் - நவுறு தீவுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.
இந்த படிமுறையை நிறைவேற்றுவதில் பலத்த இழுபறிகள் காணப்படுவதாக குறித்த விவகாரத்தை கையாளும் மருத்துவர்கள் குழு தெரிவித்திருந்தது.
இது குறித்த தங்களது அறிக்கையை செனற் சபையின் முன்பாக மருத்துவர் குழு நேற்று புதன்கிழமை சமர்ப்பித்திருக்கிறது.
அதில், அகதி நோயாளிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதில் காணப்படும் இழுபறிகளுக்கான காரணங்களை பட்டியல்படுத்தியிருக்கிறது.
தங்களது பரிந்துரைகளை பரிசீலிப்பதில் உள்துறை அமைச்சு காண்பிக்கும் இறுக்கமான நிலைப்பாடுகளுக்கு மேலதிகமாக, அகதிகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையை நேரடியாக வழங்குவதில் உள்ள சிக்கலையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
உளவள சிக்கல்களினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு தொலைபேசி வழியான மொழிபெயர்ப்புச்சேவை உகந்தது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திக்கூறியுள்ள மருத்துவர் குழு, நேரடி மொழிபெயர்ப்பு வசதிகளை வழங்கும் ஏற்பாடுகளை துரிதமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
