இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் பயணிகளுக்குத் தடைவிதிக்காமல் அவர்களை தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டும் என இந்திய சமூகத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் பின்னணியில், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட வேண்டும் அல்லது அங்கிருந்து வருவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என மேற்கு ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அமைச்சரவை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களின் எண்ணிக்கையை 30 வீதத்தால் குறைக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுவோரில் இந்தியாவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாலேயே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்களை அரசு தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டுமெனவும் ஆகக்குறைந்தது மனிதாபிமான அடிப்படையிலாவது அங்கிருந்து பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென இந்திய சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற மேற்கு ஆஸ்திரேலிய அரசின் பரிந்துரை மிகவும் கடுமையானது என அவர்கள் சாடியுள்ளனர்.
அவ்வாறு பயணத்தடை நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் ஆகக்குறைந்தது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வது உட்பட மனிதாபிமான அடிப்படையிலான காரணங்களுக்காகவாவது இங்கு வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென மேற்கு ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
