தீவிரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியாவை பாதுகாப்பதற்கான புதிய திட்டமாக பெருமளவில் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களை Drone மூலம் கண்காணிப்பதற்கு ஆஸ்திரேலிய பொலீஸார் தீர்மானித்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் இந்த பறக்கும் தானியங்கி கருவிகளின் மூலம் பெருமளவில் மக்கள் திரளும் கூட்டங்களில் கலந்திருப்பவர்கள் அனைவரையும் நோட்டமிடுவதற்கு ஆஸ்திரேலிய பொலீஸார் தீர்மானித்துள்ளனர் என்று Fairfox Media தனது விசேட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பொலீஸார் Drone மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவும் அந்த முறையை தற்போது பின்பற்றவுள்ளது.
ஆஸ்திரேலியா மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு இன்னமும் தொடர்வதாகவும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 200 ஆஸ்திரேலிய தீவிரவாதிகள் வெகுவிரைவில் நாடு திரும்பவுள்ளனர் என்றும், இவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு பலத்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் Fairfox Media தெரிவித்துள்ளது.
அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்களிடமிருந்து நாட்டினை பாதுகாப்பதற்காக, வரும் மாதங்களில் மாணவர்கள் மற்றும் கல்விமான்களிடமிருந்தும் உதவிகள் பெறப்படவுள்ளன. தீவிரவாதிகளின் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்டல், அவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான உரையாடல் மொழிகளை உடைப்பது என்பது உட்பட பல விடயங்களில் உதவிகள் பெறப்படவுள்ளன.
2005 இற்குப்பிறகு ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் இஸ்லாமிய தனிநாட்டு தத்துவத்தில் ஆர்முடையவர்கள். இவர்களில் 17 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் தற்போது பிணைணயில் உள்ளனர். இந்தக்காலப்பகுதியில் 18 தாக்குதல் முயற்சிகள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன - என்று பொலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி Fairfox Media மேலும் தெரிவித்துள்ளது.
