Day time அல்லது பகல்பொழுது அல்லது நாள்பொழுது சில நாட்களில் வேகமாகப் போய்விடுவது போல நமக்குத் தோன்றுவதுண்டு. இது அன்றாட அலுவல்களில் நாம் எந்த அளவுக்கு மூழ்கிப்போகிறோம் என்பதைப்பொறுத்தது என்றும் அன்றைய மனநிலையைப்பொறுத்தது என்றும் நாம் சிலவேளைகளில் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் இவை மட்டும் காரணங்களில்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
உலகிலுள்ள பல நாடுகளில் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 400 இடங்களில் மிகத்துல்லியமான (very precise) நேரத்தைக்காட்டும் கடிகாரங்கள் இயங்குகின்றன. இந்தக் கடிகாரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதற்கு ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்தக்கணிப்பு International Atomic Time என்று அழைக்கப் படுகிறது. இதைத்தவிர பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்து Astronomical time அல்லது Solar time கணிக்கப்படுகிறது. இந்த இரண்டு தரவுகளின் அடிப்படையில் UTC என்ற Coordinated Universal Time என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பிரபஞ்ச நேரம் அல்லது world standard time கணிக்கப்படுகிறது.

இந்த கணிப்புகளை உலகின் பலபாகங்களில் இருந்து கணித்துவரும் விஞ்ஞானிகள் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஒரு விநோதமான சம்பவத்தை அவதானித்தனர் . பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கவேண்டும். ஆனால் ஜூன் மாதம் 29 அன்று பூமி சற்று வேகமாகச் சுற்றியதால் 24 மணி நேரத்துக்கும் குறைவான காலத்திற்குள் சுழற்சியை முடித்தது என்றும் பகல்பொழுது அன்று வேகமாகப் போய்விட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக பந்து ஒரு தடவை சுற்ற 24 மணி நேரம் எடுக்கவேண்டிய சுழற்சிக்கு உண்மையில் 1.59 மில்லி செகண்ட் குறைவான காலம் எடுத்திருக்கிறது. மில்லி செகண்ட் என்பது ஒரு நொடியை 1000 ஆல் பிரித்தால் வரும் காலப்பிரமாணமாகும். இதை பொதுவாக நாம் உணர்ந்துகொள்ளவே முடியாது.
அதேபோல இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி 1.5 மில்லி செகண்ட் குறைவான நேரத்தில் பூமி தன்னைத்தானே சுற்றிவந்திருக்கிறது. ஆகவே, இந்த நிலை தொடர்ந்தால் சர்வதேச நேரம் Universal Time மற்றும் பூமியின் சுய சுழற்சி மற்றும் சூரியனைச் சுற்றிவரும் சுழற்சி காரணமாக ஏற்படும் பருவகால மாற்றங்கள் என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமிப்பந்து சுழலும் வேகம் அதிகரித்துள்ளதற்கான காரணங்கள் பல உள்ளன. இன்று நாம் சரியான நேரம் என்று பயன்படுத்துவதும் எமது கணினிகள் காட்டும் நேரமும் ஏற்கனவே சொன்ன Coordinated Universal Time என்ற அடிப்படையில் நாம் வசிக்கும் time zone என்ற நேர வலயத்திற்கு ஏற்ப கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் astronomical time என்ற பூமி தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் இது தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், பூமிப்பந்து துல்லியமாக ஒரு மில்லிசெகண்ட் கூட பிசகாமல் எப்போதும் சீராகச் சுழன்றுவருவதில்லை என்று ஆஸ்திரேலிய வானியல் விஞ்ஞானிகளுள் (astronomer) ஒருவரான Fred Watson கூறுகிறார். இதைச் சாதாரணமாக ஒருவர் உணர்ந்துகொள்ளமுடியாது என்ற போதும் உலகெங்கிலும் உள்ள 400 இற்கும் மேற்பட்ட atomic clock அணுக்கடிகாரங்களால் இதைப் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார். அத்தோடு பூமிக்கோளம் என்பது திடமான ஒருபொருளால் உருவான பந்து அல்ல என்பதோடு, அதன் உட்புறமும் வெளிப்புறமும் திரவப்பொருட்கள் உள்ளன. பூமியைச்சுற்றி வளிமண்டலம் இருக்கிறது. ஆகவே புவிசுழற்சியின் வேகம் இந்தக்காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று பேராசிரியர் Watson கூறுகிறார்.
பேராசிரியர் Watson கூறுவதுபோன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், திடீரென்று ஏன் பூமி சற்றே வேகமாக சுழலுகின்றது என்பது மர்மமாகவே இருப்பதாக தஸ்மேனியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் Matt King கூறுகிறார். இவர் செய்மதிகளில் பொருத்தப்பட்டுள்ள அணுக்கடிகாரங்கள் மூலமாக பூமியின் அளவில் அல்லது உருவில் மாற்றம், சுழற்சி மற்றும் புவியீர்ப்பு என்பவற்றை Matt King கணித்துவருபவர். 1970 களின் பின்னர் ஏதோ ஒரு காரணத்தினால் பூமி சற்றே வேகமாகச் சுழலுகிறது என்றும் பூமியின் மேற்பகுதியிலுள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாலும் சமுத்திரச் சுழற்சியில் ஏறபடக்கூடிய மாற்றங்கள் காரணமாகவும் இது நிகழக்கூடும் என்றும் மனிதரது தலையீடு காரணமாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் பூமி வேகமாக சுழல காரணமாக இருக்கக் கூடும் என்பது Matt King அவர்களின் கணிப்பாகும்.

இதைத்தவிரவும் துருவங்களில் அமைந்துள்ள புவி அச்சில் (earths axis) ஏற்படும் நகர்வு காரணமாக இது ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் King கருதுகிறார். ஆனால் இதுதான் திட்டவட்டமான காரணம் என்று அவர் கூறவில்லை. ஆகவே பூமி ஏன் சடுதியாகச் சற்று வேகமாகச் சுழலத் தொடங்கியிருக்கிறது என்பதற்கான திட்டவட்டமான காரணங்களை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை. இதன் காரணமாக நமது நாளாந்த வாழக்கை மற்றும் கணினிசார்ந்த நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகம் உள்ளன.
பூமி திடீரென்று சற்று வேகமாகச் சுழலத் தொடங்கியிருப்பது காலப்போக்கில் நமது நாள் காட்டிக்கும் அதாவது காலண்டருக்கும் seasons என்ற பருவகாலங்களுக்குமிடையே பலத்த முரண்பாடு ஏற்படும் என்பதே பலரும் முன் வைக்கும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த முரண்பாடுகள் உடனடியாக ஏற்படப்போவதில்லை என்ற போதும் மிக மெதுவாக படிப்படியாக ஏற்படும். நாம் பழகிப்போன பருவகாலங்கள் குறிப்பிட்ட தேதிகளில் மாதங்களில் நிகழாமல் போகலாம்.
வரலாற்றை ஆய்ந்தால், முன்னைய காலகட்டங்களில் பூமிப்பந்து 3 மில்லிசெகண்ட் மெதுவாக சுழன்றதாக க் கணக்கிடப்பட்டதன் காரணமாகவே லீப் செகண்ட் என்ற கணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அணுக்கடிகாரத்தையும் astronomical clock என்ற புவி சுழற்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் நேரத்தையும் இணைக்கமுடிந்தது.
லீப் செகண்ட் என்றால் என்ன என்று பார்க்கும் போது, Coordinated Universal Timeஐ சீராக வைத்திருப்பதற்காக atomic clock என்ற அணுக்கடிகை காட்டும் நேரத்திற்கும் solar time என்ற புவி சுழற்சிகாரணமாக உறுதி செய்யப்படும் நேரத்திற்கும் இடையே செய்யப்படும் ஒரு நொடி adjustment ஆகும்.
Atomic clock முறை அறிமுகப்படுத்தப்பட்ட 1948 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 27 தடவைகள் லீப் செகண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அல்லது லீப் செகண்ட்கள் – நொடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது எப்போதும் பூமி சற்று மெதுவாகச் சுழல்வதன் காரணமாகவே அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த adjustmentஐ Google மற்றும் Meta போன்ற நிறுவனங்கள் தங்கள் software தேவைகளுக்காக வேறுபட்ட முறைகளில் செய்கின்றன. ஆனால் 2020 தொடக்கம் இது தலைகீழாக மாறி 28 தடவைகள் பூமி 24 மணித்தியாலத்திற்கு குறைவான காலத்தில் அதாவது வழமைக்கு மாறாக வேகமாக சுய சுழற்சியை முடித்திருக்கிறது.
இதைச் சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒருமுறை ஒரு லீப் செகண்ட்டை delete செய்ய அதாவது கழித்துவிட வேண்டி ஏற்படலாம். இப்படிக் கழிப்பதன் காரணமாக கணினிகள் குழப்பமடையும் என்றும் global positioning receivers என்ற முறையில் குழறுபடிகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. Meta என்ற நிறுவனத்தின் software engineer கள் கருத்து தெரிவிக்கும் போது இதற்கு முன்னர் எப்போதும் லீப் செக்கண்ட்கள் – நொடிகள் கழித்துக்கொள்ளப்பட்டதில்லை என்றும் இதைப் பரீட்சித்துப் பார்த்ததுமில்லை என்றும், லீப் செக்கண்ட்கள் – நொடிகள் கழித்துக்கொள்ளப்படும்போது பாரதூரமான விளைவுகள் இதன் காரணமாக ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள்.
இந்த லீப் செக்கண்ட்களை – நொடிகளை எப்படி கழிப்பது என்பதில் விஞ்ஞானிகளிடையே ஏகோபித்த கருத்து இதுவரை இல்லை. லீப் செக்கண்ட்டை அதிகரிக்க பல நிறுவனங்களும் பல்வேறு வழிகளைக் கடைப்பிடிப்பதைப்போல லீப் செக்கண்டைக் குறைக்கவும் பலவழிகள் பின்பற்றப்படக் கூடும் என்றும் இதனால் சில குழப்பங்கள் உருவாக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
