விமானங்கள் நொறுங்கும்போது அவற்றின் அழிவை அறிய Black Box கறுப்புப்பெட்டி விமானத்தில் உள்ளது. இது கறுப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் இதன் நிறம் orange நிறமாகும்.
விமானம் விபத்துக்குள்ளாகும்போது இந்த பெட்டி கடலிலோ அல்லது காட்டிலோ, பள்ளத்தாக்குகளிலோ வீழ்ந்துவிடக்கூடும். அதை எளிதில் அதைக்கண்டுபிடிக்கக் கூடியவிதமாக அவை orange நிறத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
விமானங்களின் Black Boxஐ சாதாரணமாக flight recorders என்றும் சொல்வார்கள். விமானங்களில் இருக்கும் கறுப்புப் பெட்டி ஒரு electronic recording device - மின்னியல் பதிவுக் கருவியாகும். விமான விபத்துகள், விமானம் சம்பந்தப்பட்ட பாரதூரமான சம்பவங்கள் நிகழும்போது, இந்த கறுப்புப் பெட்டிகளில் பதிவாகியுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, விபத்து அல்லது சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணங்களைத் தீர்மானிக்கமுடியும். இந்த தீர்மானங்களை அடிப்படையாக வைத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
விமானங்களின் Black Box எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். விமானம் பறக்கும் போது பெறப்படும் தரவுகள் மற்றும் cockpit என்ற ‘விமானிகளின் இருக்கைகள் மற்றும் கருவிகளின் கட்டுப்பாடு என்பன உள்ள கட்டுப்பாட்டு அறையில்’ இடம்பெறும்,விமானிகளின் உரையாடல்கள் என்பன இந்தப்பெட்டியில் பதிவாகும்.

ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு கறுப்புப் பெட்டிகள் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.இந்த பெட்டிகள் மிக மிக உறுதியான stainless steel மற்றும் titanium போன்ற உலோகங்களைக்கொண்டு வடிவமைக்கப்படுகிறது. மணிக்கு 750 கி்மீட்டர் வேகத்தில் விமானம் சென்று காங்கிரீட் சுவரில் மோதினாலோ அல்லது இரண்டரை டன் எடையான பொருள் ஒன்றை இதன்மீது ஏற்றினாலோ அல்லது 1100 degree Celsius உஷ்ணத்திற்கு உட்பட்டாலோ அல்லது 6000 மீட்டர் ஆழமான கடல்பரப்பில் விழுந்தாலோ கூட இந்த பெட்டிகள் பாதிக்கப்படாது. இது கடலில் வீழ்ந்தால் இதிலிருந்து வெளியேறும் signals- சமிக்ஞைகள் ஒன்றரை கி. மீட்டர் தூரம்வரை பயணிக்கும் என்பதால் இதன் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் .
விமானங்களின் Black Box போன்று ஒரு கறுப்புப் பெட்டியொன்று, இப்போது நாம் வாழும் இந்த பூமிக்கும் தேவை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
புவி வெப்பமடைவது சென்ற நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 2.7 degree Celsius அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து எதிர்வரும் நூற்றாண்டுகளில் மேலும் மேலும் அதிகரிக்கும்போது, பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் படிப்படியாகப் பாதிக்கப்படும்.
காலநிலைமாற்றம் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகின்றன; தானிய விளைச்சலின் அளவு பாதிக்கப்படுகிறது. வருடாவருடம் இதே நிலை தொடர்வதால் 700 கோடி 800 கோடி என்று அதிகரிக்கக் கூடிய மக்களின் பசியைப் போக்குவது சாத்தியமாகாது.
கடல் மட்டம் உயர்வதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கிறார்கள். இதன் காரணமாக நாம் பொருளாதார வீழ்ச்சியையும் இதன் தவிர்க்கமுடியாத மற்றொரு பாதிப்பாக, ஒரு கட்டத்தில், படிப்படியாக மனித குலத்தின் அழிவையும் நாம் சந்திக்கவேண்டிய நிலை உருவாகும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இப்படியான நிலை மெதுவாக, படிப்படியாகவே நிகழுமென்றாலும், இப்படியான அழிவையும் , மாற்றத்தையும் தொடர்ந்து பதிவு செய்யவேண்டியதும் அந்தப் பதிவுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டியதும் அந்த பதிவுகள் எதிர்காலத்தில் யாருடைய கைகளைச் சென்றடைகிறதோ அவர்கள் இதே தவறுகளைத்தவிர்ப்பதற்கும் பூமியில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழலை அவர்கள் மேம்படுத்துவதற்கும் துணையாக இருக்கும் என்ற வகையில் ‘பூமிக்கான black box -கறுப்புப் பெட்டி’ என்ற சிந்தனை உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்த கறுப்புப் பெட்டியில் என்னென்ன தரவுகள் பதிவாகும் என்று பார்ப்போம். கடல் மற்றும் தரைப் பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலை, ‘ocean acidification’ என்ற ‘கரியமிலவாயு கடல் நீரில் கலப்பதால் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக கடல் நீர் (acidic) அமிலமாகும் நிலை’ , வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவின் செறிவு, குறிப்பிட்ட உயிரினங்களின் அழிவு - species extinction, சனத்தொகை மாற்றங்கள், இராணுவ செலவினங்கள், எரிபொருள் பயன்பாடு என்பன போன்ற இன்னோரன்ன தரவுகள் இந்தக் கறுப்புப் பெட்டியில் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.
காலநிலை மாற்றம் குறித்த தரவுகள் மட்டுமல்ல, உலகின் செய்தித் தலைப்புகள், சமூக ஊடகங்களின் பதிவுகள், மாநாடுகள் பற்றிய விபரங்கள் , காலநிலை மாற்றம் தொடர்பான கலந்தாய்வு பற்றிய விவரங்கள் என்பனவும் இந்தக் கறுப்புப் பெட்டியில் பதிவு செய்யப்படும். Backwards and forwards என்ற முறையில் இறந்த காலத் தகவல்களும் நிகழ்காலத் தகவல்களும் பதிவேற்றப்படும்.
விபத்து காரணமாக விமானம் வீழ்ந்து நொறுங்குவதுபோல, காலநிலைமாற்றம் காரணமாக இந்த பூமி வீழ்ந்து நொறுங்கும் நிலை ஏற்பட்டால் - அதாவது பூமியில் உயிரினம் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டால், அப்போதும் எந்த சேதமும் கறுப்புப் பெட்டிக்கு ஏற்படாது என்ற வகையில் அதிலுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து, எஞ்சியிருக்கும் நபர் அல்லது நபர்கள், அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்கவும் மற்றொரு விபத்தைத்தடுக்கவும் வழிவகுக்கும் என்பதே சிந்தனையாகும்.
ஆனால் இப்படியொரு நிலை ஏற்படும்போது, அந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் கூட நிகழலாம் என்ற வகையில், இந்தக் கறுப்புப்பெட்டி யாருடைய கைக்குப் போய்ச் சேருகிறதோ அவரால் அல்லது அவர்களால் இதிலுள்ள தகவல்களை காலப் பிரமாண -time frame அடிப்படையில் பிரித்தறிய முடியுமா?தகவல்களை decipher என்ற முறையில் விரிவாக்கம் செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இப்படி எழும் கேள்விகளுக்கும் சவால்களுக்கும், அந்தச் சவாலை எதிர்கொள்வது எப்படி என்பதையும் விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ந்து வருகிறார்கள். இதுவே இப்போதைய பெரிய சவாலாகும். Encoding என்ற முறையில் தகவல்களை விரிவாக்கம் செய்ய மொழியைப் பயன்படுத்தாமல் symbols என்ற குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
இந்த பெட்டியின் நிர்மாணம் அடுத்தவருடமே ஆரம்பமாகும் என்றபோதும், தரவுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் Glasgow நகரில் இடம் பெற்ற COP 26 காலநிலை உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. Compression மற்றும் archiving என்ற முறையில் எதிர்வரும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கான தரவுகள் பதிவாகும் என்றும் அதைத்தொடர்ந்து மிக நீண்டகால அடிப்படையில் தரவுகளைப் பதிவதற்கான வழிவகைகள் ஆராயப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கறுப்புப் பெட்டியின் நீளம் 10 மீட்டர்; அகலம் 4 மீட்டர்; உயரம் 3 மீட்டர் என்றும் இது தஸ்மேனிய மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப்பிரதேசத்தில் அமையவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Malta, Norway, Qatar போன்ற நாடுகள் இதற்காக பரிசீலிக்கப்பட்டபோதும் ஆஸ்திரேலிய புவிசார்அரசியல்- geopolitical மற்றும் பூகர்ப்பவியல் -Geological காரணிகளின் சாதகத்தன்மை காரணமாக, தஸ்மேனியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. தஸ்மேனிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்தக் கறுப்புப் பெட்டி வடிவமைக்கப்படவிருக்கிறது.
இந்த பெட்டி 7.5 சென்டி மீட்டர் தடிப்புள்ள இரும்பினால் வடிவமைக்கப்படும் என்றும், அதன் முனைகளை granite பாளங்கள் பாதுகாக்கும் என்றும் இதன் நிறுவனரும் வடிவமைப்போடு தொடர்புடையவருமான Jonathan Kneebone கூறுகிறார். இந்த பெட்டியினுள் கணினியில் இருப்பதைப்போன்று stotrage drive களும் internet connectivity -இணைய தொடர்பாற்றலும் இருக்கும். இந்த பெட்டியின் கூரைப்பகுதியில் solar panel கள் பொருத்தப்பட்டு மின்சாரம் பெறப்படும். Battery கள் மூலமாக back up ஆற்றலும் கிடைக்கும்.
இந்த கறுப்புப் பெட்டி செயல்பட ஆரம்பித்தபின், digital platform என்ற எண்ம தளத்தின் மூலமாக பொதுமக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்; தளத்தைப் பார்வையிடமுடியும் என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
