
Moratuwa, South of of Colombo, Sri Lnaka. December 2014 Boxing Day tsunami, triggered by a 9.2 earthquake in the Indian Ocean off the west coast of Indonesia. Source: DPA
நிலநடுக்கம் ஏன் உண்டாகிறது?
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் அல்லது பூமியதிர்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் earthquake, பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, பூமியின் தளத்தட்டுகள் (டெக்கோனிக் கட்டுகள்) என்கிற Plates ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதனால் இடம் பெறும் அதிர்வைக் குறிக்கிறது. இந்த அதிர்வை Sesimometer என்கிற நிலநடுக்கமானியால் அளந்து, இத்தனை ‘அளவில்’ நிலநடுக்கம் வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். முன்னர் ரிக்டர் (Richter) அளவு என்பது பயன்படுத்தப்பட்டது, தற்போது வெறும் அளவு (magnitude) என்று கணிக்கிறார்கள். 7.0 என்ற அளாவிற்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். விக்டோரியா, கான்பரா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாநிலங்களின் சில பகுதிகளை கடந்த புதன்கிழமை தாக்கிய நிலநடுக்கம் 6.0 அளவு என்று கணிப்பிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாகி இருந்தால் அழிவு அதிகம் இருந்திருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Damage from the 1964 Alaskan Earthquake. Source: USGS
பூமிவியல் என்ன சொல்கிறது?
பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது என்றும் அவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது என்றும் நமக்குத் தெரியும். நிலப்பரப்பிலும் நீரின் அடியிலுமாக உள்ள ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும் அதில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. தடிமன் கொண்டதாக இருக்கின்றன. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 1 லட்சம் நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன.

Earthquakes (M6.0+) between 1900 and 2017 Source: Creative Commons
நிலநடுக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
நிலநடுக்கம் ஏற்படும்போது நிலம் நடுங்கி பிளந்துகொள்ளும். இதனால் கட்டடங்களும், வீடுகளும் அழிவுக்குள்ளாகும். அடுத்து மண்சரிவு அல்லது பனிச்சரிவு ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆழிப்பேரலை என்கிற சுனாமி வருவதற்கும் வாயப்பிருக்கிறது.
கடலடியில் 7.5 அளவுக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் சுனாமி அலைகளை உருவாக்கும். இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தில் தொடங்கி இந்தியாவரை பெரிதும் பாதித்த 2004 டிசம்பர் சுனாமியையும் அது கொணர்ந்த பாதிப்பையும் யாராலும் மறக்க முடியாது. நிலநடுக்கத்தினால் வெள்ளம் வரலாம். தடுப்பணைகள் உடையலாம். இதையெல்லாம் தாண்டி, நிலநடுக்கத்தின் போது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இறக்கவும், காயமடையவும் அதிக வாய்ப்புள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் என்று சொத்துகள் நாசமாகலாம். இந்தக் குழப்பங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகலாம்.

Impact of 2004 tsunami Source: UNOSAT
ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கங்கள் எவையெவை?
- 1855 - Victoria - Offshore Cape - 5.5 அளவு
- 1902 - south Australia Beachport - 6.5 அளவு
- 1918 - Queensland - Bundaberg - 6.0 அளவு
- 1946 - Victoria/Tasmania - Bass Strait - 6.2 அளவு
- 1968 - Western Australia - Meckering - 6.5 அளவு
- 1970 - Western Australia – Canning Basin - 6.7 அளவு
- 1971 - Western Australia - Canning Basin - 6.4 அளவு
- 1975 - Western Australia - Canning Basin - 6.2 அளவு
- 1979 - Western Australia - Cadoux - 6.1 அளவு
- 1988 - Northern Territory - Tennant Creek - 6.6 அளவு
- 1989 - New South Wales - Newcastle - 5.6 அளவு; 13 பேர் மாண்டனர்
- 1997 - Western Australia - Collier Bay - 6.2 அளவு
- 2011 - Queensland - Bowen - 5.3 அளவு
- 2012 - Victoria - Gipplsland - 5.3 அளவு
- 2015 - Queensland - Fraser Island - 5.4 அளவு
- 2016 - Northeren Territory - Petermann Ranges - 6.1 அளவு
- 2018 - Western Australia Lake Muir - 5.3 அளவு
- 2021 - Victoria - Melbourne - 5.9 அளவு

Geoscience Australia's National Earthquake Alerts Centre Source: Geoscience Australia
நிலநடுக்கத்தை உணர்ந்தால் உடனடி செய்ய வேண்டியது என்ன?
- வீட்டைவிட்டு அல்லது கூரை இருக்கும் கட்டிடத்தை விட்டு உடனடி வெளியேறி கட்டிடம், மரம், மின்கம்பி, பாலம் போன்றவை இல்லாத, வெளியிடத்திற்கு செல்லுங்கள்.
- வீட்டை விட்டு வெளியேற முடியவில்லையென்றால், நல்ல தடியான மேசைக்கு கீழே போய் ஒளிந்துக் கொள்ளுங்கள்.
- லிப்டுக்குள் மாட்டிக்கொண்டீர்களென்றால், கீழே உட்கார்ந்து, நன்றாக மூடியபடி, தரையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- மிகவும் அவசியம் தவிர மற்றபடி வாகனங்களை ஓட்டுவதைத் தவிருங்கள்.
- வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது நிலநடுக்கத்தை உணர்ந்தால், உடனடியாக ஓரமாக நிறுத்தி, சீட் பெல்ட் போட்டவாறு அமைதியாக இருங்கள்.
- நடுக்கம் நின்றதும், பிளவுபட்டிருக்கும் சாலை, உடைந்து போயிருக்கும் பாலம் போன்றவற்றை பார்த்து கவனமாக ஓட்டுங்கள். அல்லது பயணத்தைக் கைவிடுங்கள்.
- கடற்கரையோரம் இருந்தீர்களென்றால், கீழே உட்கார்ந்து, உங்களை மூடியபடி, தரையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நடுக்கம் முடிந்ததும், உடனடியாக மேட்டுப் பகுதியை நோக்கி ஓடுங்கள். சுனாமி அலைகள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.
- மலைப்பகுதியில் இருந்தீர்களென்றால், மண்சரிவு இருக்கும் இடம் இல்லாத இடத்திற்கு நகருங்கள்.
- எச்சரிக்கை செய்திகளை ஏதாவதொரு ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
- நிலநடுக்கம் சம்பந்தப்பட்ட உடனடி உதவிக்கு SES phone 132 500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உயிருக்கு அபாயம் இருக்கும் சூழலில் 000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நிலநடுக்கம் வந்தால் நம்மையும் பிறரையும் காப்பாற்ற முடியும்
READ MORE
நிலநடுக்கத்திற்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும்?
- வீட்டில் ஏதாவது உடைந்த பொருட்கள் இருந்தால் அதை கவனமாக சுத்தம் செய்யுங்கள்.
- வீட்டின் உள்ளோ அல்லது வெளியிலோ, உடைப்புகள் அல்லது விரிசல்கள் இருக்கிறதா என பரிசோதியுங்கள். சேதத்திற்கு ஏற்றாற்போன்று, உடனடியாக இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் அனுப்புங்கள்.
- வீட்டிற்கு வரும் வாயு குழாயிலோ, நீர் குழாயிலோ வெடிப்பு இருக்கிறதா என சரிபாருங்கள்.
- தூசி இருக்கும் பட்சத்தில், வாயை ஏதாவது ஒரு துணி கொண்டு மூடிக்கொள்ளுங்கள்.
- நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்டால், ஒலி வரும் குழாயையோ அல்லது சுவரையோ தட்டி, மீட்பு பணி செய்பவர்களுக்கு சமிக்ஞை செய்யுங்கள். தேவைப்பட்டால், குரலை உயர்த்தி கூப்பிடுங்கள்.
நிலநடுக்கம் வராமல் நாம் தடுக்க முடியாது. ஆனால் நிலநடுக்கம் வந்தால் நம்மையும் பிறரையும் காப்பாற்ற முடியும்.
READ MORE
ஆய்வுக்கு உதவியவை:
- https://www.9news.com.au/national/earthquakes-australia-list-history/e9b37bce-e91a-402a-9b1c-b5bc377488d1
- https://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Australia
- https://ta.wikipedia.org/wiki/
- https://tamil.news18.com/news/international/what-is-the-reason-for-earthquake-ghta-tmn-398387.html
- https://www.bbc.com/tamil/topics/c06gq6jrp7gt
- https://www.abc.net.au/news/2021-09-22/live-melbourne-earthquake-victoria-nsw-canberra/100481780
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.