மெல்பேர்ன் வடக்கில் பொலிஸ் என்ற போர்வையில் கார் ஒன்றைத் திருட முயன்றவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
கடந்த புதன்கிழமை இரவு 8.20 மணியளவில் பெண் ஒருவர் , Craigieburn, Rushwood Drive-க்கு அருகே Hume Highway-இல் காரில் சென்று கொண்டிருந்தபோது silver VE Holden கார் ஒன்று, சிவப்பு மற்றும் நீல நிற விளக்கை ஒளிர்ந்தவாறு குறித்த பெண்ணை இடைமறித்துள்ளது.
அப்பெண்ணும் அது பொலிஸாருடைய வாகனம் எனக் கருதி தனது காரை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து தமது காரிலிருந்து இறங்கிய 4 ஆண்கள், அப்பெண்ணின் காரை அணுகி அதற்குள் ஏறமுற்பட்ட வேளையில், உடனடியாக சுதாரித்துக்கொண்டவர் காரை விரைவாக ஓட்டிச்சென்றுவிட்டார்.
எனினும் அவர்கள் தன்னை Hume Highway வழியாக நீண்டதூரம் துரத்திவந்ததாகவும், தான் எப்படியோ தப்பித்துவிட்டதாகவும், குறித்த பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆபிரிக்க பின்னணி கொண்டவர்களைப் போன்ற தோற்றமுடையவர்கள் எனவும், இறுதியாக இவர்கள் Cooper Street-இல் வாகனத்தில் சென்றமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை தாம் இடைமறிக்கப்படும் வாகனம் தொடர்பில் எவருக்காவது சந்தேகம் எழுந்தால், உடனடியாக 000 என்ற இலக்கத்தை அழைக்கலாம் எனவும், அல்லது அருகிலுள்ள பொலிஸ்நிலையத்திற்கு வாகனத்தை ஓட்டிச்செல்லலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
