ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் ஏழு பேரில் ஒருவர் காலை உணவு உட்கொள்ளாமல்தான் வகுப்புக்களுக்கு செல்கிறார்கள் என The Universities Australia Student Finances அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் மாணவர்கள் ஈட்டிக்கொள்ளும் வருமானங்களும் - உதவிகளும் - தொடர்ந்தும் குறைவாகவே உள்ளதால், ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த மன உளைச்சல்களுடன் மாத்திரமல்லாமல், உடல்நலம் தொடர்பான சவால்களுடன்தான் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள் என சுமார் 18 ஆயிரத்து 500 மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பின்னர் விடுத்த அறிக்கையில் The Universities Australia Student Finances அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வந்து கல்வி கற்கும் மாணவர்கள் வாரமொன்றுக்கு 20- 30 மணிநேரம்தான் வேலை செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு நிலவும் சூழலில், அவர்கள் வருமானத்தை ஈட்டும் வழிமுறைகளுடன் சேர்ந்து கற்றல் நடவடிக்கையை நிறைவுசெய்வதற்காக பெரும்போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது என்றும், இது இயல்பாகவே அவர்களது வாழ்க்கை முறையை பெருமளவில் பாதிக்கிறது என்றும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்த ஆய்வில்- பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை தங்களது செலவிலேயே மேற்கொள்கிறார்கள் ஆனால், ஆஸ்திரேலியாவில் முழுநேரம் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒரு மாணவரின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் டொலர்களாகவே உள்ளன. இது வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களின் வருமானமாகும். இவ்வாறான ஒரு சூழலில் தமது கற்றல் நடவடிக்கைக்கும் பணமீட்டும் வழிமுறைகளுக்கு இடையிலும் சிக்கிக்கொள்ளும் இந்த மாணவர்கள் மிகப்பெரிய நிதிச்சுமைக்கு எதிராக போராடுகிறார்கள். கடந்த வருடம் பல்லைக்கழக மாணவர்களின் நிதிச்சூழல் சற்று மேம்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டிருப்பினும், அது மாணவர்கள் தங்களது செலவுகளை குறைத்திருப்பதாலேயே தவிர, மேலதிக வருமானங்களோ - உதவிகளோ அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதால் அல்ல – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.