குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்படவுள்ள மின்கட்டண உயர்வு நாட்டின் பணவீக்கத்தைவிட இரட்டிப்பாக இருக்கும். NSWமாநிலத்தில் அதிகபட்சமாக 18 சதவீத அதிகரிப்பு ஏற்படும் என்பதால் தற்போதைய பணவீக்கம் 5.1 என்ற நிலையில் அதிகரிப்பு மூன்று மடங்காக இருக்கும். DMO- default market offer என்ற திட்டத்தின் கீழ் வரும் மற்றொரு மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்த அதிகரிப்பு பணவீக்கத்தைவிட நான்கு மடங்காக இருக்கும். நுகர்வோரிடம் அறவிடப்படக்கூடிய உச்ச பட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படுவதற்காகவே Default Market Offer என்ற முறை முன்பு அறிமுகமானது.
மின் உற்பத்திச்செலவு 50 சதவீத்த்தால் அதிகரித்துள்ளதால் எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் நுகர்வோர் மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டி ஏற்பட்டும் என்று The Australian Energy Regulator என்ற அமைப்பு அறிவித்திருப்பதாக புதிய எரி சக்தி வள அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் Chris Bowen தெரிவித்தார்.
எரிவாயு மற்றும் நிலக்கரி என்பவற்றின் விலைகள் சர்வதேச ச் சந்தையில பலமடங்கு அதிகரித்திருப்பதே மின்சார கட்டான உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள மின் உற்பத்தியைப்பார்க்கும்போது 40 சதவீதமான மின்சாரம் நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 34 சதவீதம் dieselஐ பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படுகிறது. 22 சதவீதம் gas என்ற எரிவாயுவைக் கொண்டு உற்பத்தியாகிறது. சொற்ப அளவில்தான் நீர் மின்சாரமும் renewable என்ற காற்று மற்றும் சூரிய ஒளி என்பனவும் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, நிலக்கரி, எண்ணெய் என்பவற்றின் விலை உலகச்சந்தையில் அதிகரித்துள்ளமை காரணமாக மின் உற்பத்தியாளர்கள், retailers என்ற மின்சாரத்தைச் சந்தைப்படுத்துவோரிடம் அறவிடும் கட்டணங்களை அதிகரித்திருக்கிறார்கள். இதைத்தவிரவும் நிலக்கரி மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையங்களில் அங்குள்ள யந்திரங்கள் மற்றும் தளபாடங்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளும் பலமடங்கு அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
‘எல்லாவற்றுக்கும் மேலாக முன்னைய Morrison அரசு தாமதமாகச் செயல்பட்டகாரணத்தாலும் பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்ததாலும் இப்போது நுகர்வோரும் வர்த்தகத்துறையிலுள்ளோரும் அதிக கட்டணத்தைச் செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக’ புதிதாக எரிசக்தி வள அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள Chris Bowen கூறியிருக்கிறார்.

இந்த அதிகரிப்பு பற்றிய அறிவித்தல் முன்னாள் பிரதமர் Scott Morrison பதவியிலிருந்த போது இம்மாதம் மே 1 ஆம் தேதியே வெளியிடப்பட்டிருக்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற்கொண்டு இந்த அறிவித்தலை Morrison அரசு தாமதப்படுத்தியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. Morrison அரசில் எரிசக்தி வள அமைச்சராக இருந்த Angus Taylor தான் இந்த அறிவிப்பு தாமதத்திற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆனால் முன்னாள் அமைச்சர் Angus Taylor சார்பாக பேசவல்ல பேச்சாளர் ஒருவர், Chris Bowen இன் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு இந்த அறிவித்தலை AER- Australian Energy Regulator , May மாதம் 26 ஆந்திகதிதான் வெளியிட்டது என்றும் இதில் முன்னாள் அமைச்சர் Angus Taylor எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மின்கட்டண உயர்வு பொதுமக்களைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வாழ்க்கைச்செலவு அதிகரித்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பொது மக்களை நேரடியாகப் பாதிப்பதோடு இதன் காரணமாக ஏற்படக்கூடிய transport செலவுகள் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கின்றன. அத்தோடு வட்டி வீதங்கள் உயர்ந்துவருவதால் வீட்டுக் கடன் களுக்கான தவணைத்தொகைகளும் உயர்ந்துவருகின்றன. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு பொதுமக்களை மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மின்கட்டண உயர்வு காரணமாக நுகர்வோருள் சிலர் வருடாந்தம் 250 டாலர்கள்வரை அதிகமாக செலுத்தவேண்டி யேற்படும் என்று கணிக்கப்படுகின்றது. அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளைச்சமாளிக்க க் கூடிய விதமாக சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்பதே பொதுமக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.

ரஷ்யா யுக்ரைனை ஆக்கரமித்தது காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச சந்தை நிலைமைகள் இங்கு மின்கட்டணம் உயர்வதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச சந்தை நிலைமைகள் காரணமாக எரிவாயு, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப்பொருட்களுக்கு விலையுயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மின் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்திருக்கின்றன.
மேலும் பெருவெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக NSW, குவீன்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் பல இயங்கவில்லை என்பதோடு இந்த கால கட்டத்தில் மின் தேவையும் வெகுவாக அதிகரித்தது. மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு அவற்றைப் பராமரிப்பதற்கான செலவினங்களும் அதிகரித்ததாக க் கூறப்படுகிறது.
இதைத்தவிரவும் coal powered plants என்ற நிலக்கரியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையங்களை ப் படிப்படியாக நிறுத்திவிட எடுக்கப்படும் முயற்சிகள் காரணமாகவும் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக மின்சாரத்தைச் சந்தைப்படுத்துவோர் (retailers) தெரிவிக்கிறார்கள்.

‘மின்சாரத்தைச் சந்தைப்படுத்தும் retailers என்ற விநியோகஸ்தர்கள் அல்லது சில்லறை வியாபாரிகள் எல்லோருமே ஒரேவிதமாக பாதிக்கப்படமாட்டார்கள். ஆகவே அவர்கள் எல்லோருமே நுகர்வோருக்கான விலைகளை அதிகரிக்க மாட்டார்கள்’ என்று Grattan Institute ஐச் சேர்ந்த Tony Wood கூறுகிறார். ‘AGL மற்றும் Origin போன்ற நிறுவனங்கள் மின் உற்பத்தியாளர்களிடம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தங்கள் காரணமாகவும் அவர்களுக்குள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை காரணமாகவும் தொடர்ந்தும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை உற்பத்தியாளர்களிடமிருந்து அவர்களால் பெறமுடியும் . ஆகவே அவர்கள் விலைகளை உயர்த்தத் தேவையில்லை’ என்றும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பல அமசங்களை கருத்திற்கொள்ளலாம். குறிப்பாக, தற்போதுள்ள விநியோகஸ்தரிடம் பேரம் பேசி கட்டணத்தைக்குறைக்க முயற்சிப்பதும் Shop around என்று சொல்லப்படுகிற குறைவான கட்டணம் அறவிடும் விநியோகஸ்தர்களைத் தேடிப்பிடிப்பதும் இன்னும் சாத்தியமே என்று energy consumer council இன் தலைமை நிர்வாகி Lynne Gallagher கூறுகிறார். அத்தோடு மின்சாரத்தை பயன்படுத்துவதில் சிக்கனமும், முக்கியமாக குளிர்காலத்தில் வீட்டினுள் உள்ள வெப்பம் வெளியேறாத வண்ணம் சன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு இருக்கும் துவாரங்களை அல்லது இடைவெளிகளை அடைப்பது, சமையலுக்கு மற்றும் அறையை வெப்பமாக்க மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது கூடிய கவனம் செலுத்துவது போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
