Emirates விமானசேவை நிறுவனம் அடுத்தவாரம் முதல் ஒன்பது இடங்களுக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
London Heathrow, Frankfurt, Paris, Milan, Madrid, Chicago, Toronto, Sydney , Melbourne ஆகிய இடங்களுக்கான சேவையை எதிர்வரும் மே 21 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பயணிகளை தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகளை அறிவித்திருக்கும் நாடுகளின் நிபந்தனைகளை நிவர்த்திசெய்பவர்களுக்கு மாத்திரமே தாங்கள் சேவையை வழங்கவுள்ளதாக Emirates அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாடுகள் அறிவித்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயணிகள் நிவர்த்திசெய்கிறார்களா என்பது குறித்த முழுமையான பரிசீலனை முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் என்றும் Emirates தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள தங்களது விமானசேவையில் பல புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமானங்களில் பணிபுரிபவர்கள் இந்த ஏற்பாடுகளை இறுக்கமாக பேணவுள்ளதாகவும் Emirates மேலும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று அபுதாபி ஊடாக மெல்பேர்னிலிருந்து லண்டனுக்கான விமான சேவையை மே 15 முதலும், அபுதாபி ஊடாக லண்டனிலிருந்து மெல்பேர்னுக்கான சேவையை மே 21 முதலும் ஆரம்பிக்கவுள்ளதாக Etihad Airways அறிவித்துள்ளது.
இவைதவிர Qatar Airways, United Airlines உள்ளிட்ட சில விமானசேவைகளும் வெவ்வேறு மட்டங்களில் சர்வதேச விமான சேவைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
விமானத்திற்குள் ஏறும்வரையிலான வரிசையில் சமூக இடைவெளியை பேணிக்கொள்ளுதல், விமானத்திற்குள் ஆசனங்களுக்கு இடையிலும் பயணிகளுக்கு இடையில் போதிய இடைவெளியை பேணுதல் போன்றவை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது என்பதுடன் - விமானத்தினுள் முன்புபோல சஞ்சிகைகள் வழங்கப்படமாட்டாது என்றும், தொடுகைகளின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முடிந்தளவு தவிர்க்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் மாத்திரமே விமானத்தினுள் அனுமதிக்கப்படும் என்றும் இதுதொடர்பான சோதனைகள் பயணிகளிடத்தில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த விமானசேவைகள் அறிவித்துள்ளன.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
