ஆஸ்திரேலியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாதவகையில் flu அல்லது வைரல் காய்ச்சல் இம்முறை பலரையும் தாக்குகிறது.
முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இவ்வருடம் flu-வினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை, ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுள்ள பரிசோதனைக்கூடங்கள் உறுதிசெய்துள்ளன.

குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு குயின்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா, டஸ்மேனியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இம்முறை flu-வினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக குயின்ஸ்லாந்தில் கடந்த 5 வருடங்களை விட, இவ்வருடம் flu-வினால் பாதிக்கப்பட்ட அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதியவர்களே அதிகமாவர்.
Flu-வினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டது போன்ற அதிகரிப்பு, நியூசிலாந்து மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் எங்கும் அவதானிக்கப்படவில்லை.
அப்படியென்றால் இம்முறை அதிகளவானோரை flu தாக்குவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
1. Flu-வானது Influenza-A, Influenza-B என்ற இருவகை வைரஸ்களால் ஏற்படுகின்றது. இதில் Influenza-A-யில் அடங்கும் A/H3N2 என்ற வைரஸின் ஆதிக்கம் கடந்த 5 flu season-இல் அதிகமாக காணப்பட்ட நிலையில், இம்முறை இன்னுமதிகமாக பலரையும் தாக்குகின்றது. ஏனைய வைரஸ்கள் போலில்லாமல் A/H3N2 புதுப்பித்துக்கொள்ளும் சக்திகொண்டது என்பதால் இதன் தாக்கம் இம்முறை அதிகமாக காணப்படுகின்றது.
2. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது flu-வினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கான பல நவீன இலகுவான பரிசோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் முன்னைய காலங்களைவிட தம்மை flu பரிசோதனைக்குட்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளதால் இவ்வருடம் அதிகளவானோர் flu-வினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் flu-வின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் காலப்பகுதியென்றாலும் கூட, flu vaccine போடத் தவறியவர்கள் அதனைப் போட்டுக்கொள்வதன் மூலம் ஓரளவுக்கு இதன் பிடியிலிருந்து தப்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.