ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இப்படியான பொருட்களை declare-பிரகடனப்படுத்தாமல் கொண்டுவருபவர்கள் அபராதங்களை சந்திக்க நேரிடும் என்பதுடன் அவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படலாம்.
வேளாண்மை, நீர் மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களம் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிர்வகிக்கிறது.
நாட்டுக்குள் எதைக் கொண்டு வரலாம் மற்றும் எதைக் கொண்டு வரக்கூடாது என்பதைப் பற்றி அறிந்து கொள்வதும் அதற்கிணங்க நடப்பதும் பயணிகளின் பொறுப்பு என பிரிஸ்பேன் விமான நிலையத்தின் Operations Manager Alan Self சொல்கிறார்.

வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிர் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.
Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.
ஆஸ்திரேலியாவில் foot-and-mouth disease, பறவைக் காய்ச்சல் H5N மற்றும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் போன்ற விலங்குகள் தொடர்பான நோய்கள் இல்லை. இவ்வாறான நோய்ப்பரவல் இங்கு ஆரம்பித்தால் அது ஆஸ்திரேலியாவின் விவசாயப் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதனால்தான், அனைத்து இறைச்சிப் பொருட்களும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என Operations Manager Alan Self கூறுகிறார்.

பாலில் செய்தபொருட்கள், கேக், தேன் மற்றும் கடல் உணவுகள் உள்ளிட்ட பிற உணவுகள் ஆய்வுக்கு உட்பட்டவை. அதேநேரம் அரிசி, பருப்பு வகைகள் மற்றும் பயிர் விதைகள் போன்ற பொருட்களை நாட்டிற்குள் எடுத்துவருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அனுமதி பெற்றிருந்தாலேயொழிய முட்டை, உயிருள்ள விலங்குகள், தாவரங்கள், மரப் பொருட்கள் மற்றும் பிற உயிரியல் பொருட்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாது. விதைகள் தொடர்பில் சில விதிவிலக்குகள் வழங்கப்படலாம் என Alan Self தெரிவித்தார்.
இவ்வாறு பொருட்களை பிரகடனப்படுத்தாமல் விடுபவர்கள் 444 டொலர்கள் முதல் 2600 டொலர்கள் வரை அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஆபத்தான தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிகூட சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

வெளிநாட்டு விற்பனையாளர்களிடமிருந்து சில souvenirs நினைவுப் பொருட்களை வாங்கும் போது பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய எல்லைப் படையின் Matthew Rowe கூறுகிறார்.
பல பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த Matthew Rowe துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை உதாரணமாக கூறினார்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள் அனுமதிக்கப்படும் என்றபோதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மருந்துச் சீட்டு அல்லது உங்கள் மருத்துவரின் கடிதம் ஒன்றை எடுத்துவரவேண்டும்.
நீங்கள் கொண்டுவரும் பொருட்கள் குறித்த சந்தேகம் இருந்தால், உங்களுக்கான incoming passenger card-இல் அவற்றை பிரகடனப்படுத்திவிட்டு, உதவிக்கு ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரியை அணுகுவதே சிறந்த விடயம் என Matthew Rowe கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவிற்குள் நீங்கள் என்ன பொருட்களை கொண்டு வரலாம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு,Department of Agriculture, Water and the Environment இணையதளத்தைப் பார்வையிடவும்.
மதுபானங்கள், சிகரெட்டுகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர நீங்கள் திட்டமிட்டால், Australian Department of Home Affairs இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
