SKIP TO MAIN CONTENT

ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வருகிறது புதிய பெற்றோர் விசா!

parent visa
Source: SBS

1 min read

Published

Presented by Renuka

Source: SBS Hindi


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா ஏப்ரல் 17ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்புதிய பெற்றோர் விசாவுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சட்டமுன்வடிவுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற அனுமதி கிடைத்ததையடுத்து இப்புதிய தற்காலிக பெற்றோர் விசா நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் தற்காலிக பெற்றோர் விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற அதேநேரம் எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம் என குடிவரவு அமைச்சர் David Coleman அறிவித்துள்ளார்.

Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் தமது பெற்றோரை 3 வருடங்களுக்கு வரவழைப்பதற்கு 5000 டொலர்களைச் செலுத்த வேண்டும். அதேபோன்று 5 வருட விசாவுக்கு 10,000 டொலர்கள் செலுத்த வேண்டும். மேலதிகமாக 10,000 டொலர்கள் செலுத்துவதன் மூலம் மேலும் 5 வருடங்களால் இந்த விசாவை நீடித்துக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் medicare உட்பட அரசின் எந்தவொரு நலன்புரி சேவைகளும் தற்காலிக பெற்றோர் விசாவில் வருபவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த விசாவில் வருபவர்கள் தனியார் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் அவர்களது பிள்ளைகள் நிதி உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

அதேநேரம் குறித்த விசாவுக்கு விண்ணப்பிப்பவர் தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மதிப்பீடொன்றை மேற்கொண்டு அதற்கான அனுமதி கிடைத்த பின்னரே பெற்றோரை வரவழைப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த விசாவூடாக நிரந்தர வதிவிடம் பெறமுடியாமை மற்றும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளமை போன்றன கவலை தரும் விடயங்கள் என புலம்பெயர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now