கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது 82 கிலோ உடல் எடையை 68 கிலோவாக குறைப்பதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மேற்கு ஆஸ்திரேலிய பெண்ணொருவர் சத்திரசிகிச்சை முடிந்து இரண்டு வாரங்களில் மாரடைப்பினால் மரணமாகியிருந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.
44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான Gerda Dunkel என்ற இப்பெண்ணின் மரணத்துக்கான காரணம் எடைகுறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைதான் என்று தெரிவிக்கப்படுகின்றபோதும் இந்த விசாரணை தொடர்பான தீர்ப்பு அடுத்தவருடம் வெளியிடப்படும் என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அடுத்தடுத்த வாரங்களில் குறிப்பிட்ட பெண்ணுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்றுவந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் இறந்துள்ளார்.
இவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும்போது தொடர்ச்சியான குறட்டை, கணுக்கால் நோவு, முதுகு உளைவு போன்ற எடை கூடியவர்களுக்கு காணப்படும் அறிகுறிகளின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட பெண், இந்த சத்திரசிகிச்சைக்கு தகுதியானவர் என்று உறுதியாக முடிவெடுத்து அதன் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் - பரம்பரை ரீதியாக குறிப்பிட்ட பெண்ணுக்கிருந்த நீரிழிவு நோய் சிலவேளைகளில் இவருக்கு சத்திரசிகிச்கையின் பின்னர் வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.
ஆனால், எடை குறைப்பிற்காக மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைத்துறை தொடர்பான நிபுணர் இந்த விசாரணைகளின்போது கருத்து தெரிவிக்கும்போது , குறிப்பிட்ட பெண் 82 கிலோவிலிருந்து ஆறு கிலோவை குறைப்பதற்கு ஏதுவாகவே அவரது உடல் தகுதி இடமளித்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Share
