ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்துக்கு ஸ்பொன்ஸர் செய்வதாக உறுதியளித்து, 14 மாதங்களாக தனது உணவகத்தில் இந்தியதம்பதியினருக்கு ஊதியம் கொடுக்காமல் வேலை வாங்கினார் என்று கூறப்படும் முன்னாள் இந்திய உணவக உரிமையாளர் ஒருவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
விக்டோரியா Wangaratta பகுதியில் இயங்கிய இந்திய உணவகமொன்றில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணிபுரிந்த இந்தியப்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இந்த அநீதி இடம்பெற்றிருப்பதாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது உணவகத்தில் பணிபுரிவதற்கு ஊதியத்துடன் ($42,500) தங்குமிடமும் தருவதாகக்கூறி அப்பெண்ணை வரவழைத்த குறிப்பிட்ட முன்னாள் இந்திய உணவக உரிமையாளர், இன்னொரு உணவகத்தின் பண்டக சாலையில் அப்பெண்ணும் கணவனும் தங்குவதற்கு இடமொதுக்கிக்கொடுத்துவிட்டு, உணவகத்தின் சகல வேலைகளையும் அவர்களிடம் சுமத்தி - அடிமைகள்போல - வேலை வாங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னரே பேசியபடி ஊதியத்தை கேட்டபோது, தரமுடியாது என்று கூறினார் என்றும் ஸ்பொன்ஸர் விண்ணப்பத்துக்காக தனது உணவகத்தில் வேலை செய்வது ஞாபகமிருக்கட்டும் என்று மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட உணவகத்தில் சமைப்பது, பரிமாறுவது, கூட்டித்துடைப்பது என்று சகல வேலைகளையும் 14 மாதங்களாக இந்த தம்பதியினர் செய்துவந்தார்கள் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தரவதிவிட உரிமைக்காக தவித்தவர்களை தனது அதிகாரத்தின் செல்வாக்கை பயன்படுத்தி அடிமைகளாக நடத்தினார் என்று குறிப்பிட்ட உணவக உரிமையாளருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு தனது வியாபாரத்தை இழுத்துமூடிய இவர், Fair Work Ombudsman-க்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் - தம்பதியினருக்கு வாரம் நூறு டொலர்களை கொடுத்துவந்திருக்கிறார்.
தம்பதியினருக்கு 85 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டிருக்கவேண்டிய இடத்தில் தற்போது கொடுத்துவரும் பணத்தொகை எந்த வகையிலும் போதாது என்றும், உணவக உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் இவரது காரியத்தினால் குறிப்பிட்ட தம்பதியினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் ஏனைய பாதிப்புக்களுக்கும் காரணமானவர் என்ற ரீதியில் இவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சிறைத்தண்டனையை கோரியுள்ள அரச தரப்பு வழக்கறிஞர், அதுவே இவரைப்போல குற்றம் செய்வதற்கு துணியும் ஏனையவர்களுக்கும் தக்க பாடமாக அமையும் என்று எடுத்துக்கூறியுள்ளார்.
இவருக்குரிய தண்டனை வழங்கும் நீதிமன்ற அமர்வு எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
