விக்டோரியவாசிகள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது அணியவேண்டிய முகக்கவசம் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடொன்று இன்று - October 11 - நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் முகக்கவசங்களை மாத்திரம் அணியவேண்டுமே தவிர, முகத்தை மூடிக்கொள்ள துணியை உபயோகிப்பது, தலைக்குப்போடும் துணித்தொப்பியினாலேயே முகத்தையும் இழுத்து மூடிக்கொள்வது, குளிருக்கு கழுத்தை சுற்றிப்போடுகின்ற கம்பளியைக்கொண்டு முகத்தை மூடிக்கொள்வது (bandana, scarf & face shield) போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் 27ம் திகதி வெளியிடப்பட்டதுடன் இருவார grace period (சலுகைக்காலம்) வழங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பினை மீறுபவர்களுக்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று விக்டோரிய Premier Daniel Andrews அறிவித்துள்ளார்.
விக்டோரியாவில் வீட்டை வெளியே வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்ற நடைமுறை கடந்த ஜுலை 22 ஆம் திகதிமுதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியர், சிறப்பு மருத்துவ காரணங்களை உடையவர்கள் மற்றும் உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள் ஆகியோர் இதற்கு விதிவிலக்கானவர்கள் ஆவர்.
ஏனையவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்புக்கு ஏற்றவாறான முகக்கவசங்களை அணியவேண்டும் என்பது மாநில அரசின் கோரிக்கை. ஆனால், உரிய முகக்கவசங்களை அணியாது bandana, scarf, face shield போன்றவற்றை அணிவது அடியோடு நிராகரிக்கப்படுகின்றன என்று Daniel Andrews தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
