ஆஸ்திரேலியாவில் கல்விகற்கும் சீன மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படுகின்ற புதுவிதமான மோசடி நியூ சவுத்வேல்ஸ் பொலீஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள சீன மாணவர்களை வட்ஸ் அப் போன்ற இரகசிய தொடர்பாடல் மார்க்கங்களினால் தொடர்புகொள்ளும் இணையத்திருடர்கள், குறிப்பிட்ட மாணவர்களுக்கு எதிராக சீனாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெகுவிரைவில் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தங்களது மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.
இந்த சிக்கலில் இருந்து தப்புவதற்கு குறிப்பிட்ட மாணவர்கள் தாங்கள் ஆஸ்திரேலியாவில் கடத்தப்பட்டிருப்பதைப்போல பாவனை செய்து படங்களை எடுத்து, சீனாவிலுள்ள தங்கள் பெற்றோருக்கு அவற்றை அனுப்பி, அவர்களிடமிருந்து பணம் பெற்று அதனைத் தமக்கு கொடுத்தால், இந்த சிக்கலில் இருந்து விடுபடலாம் என்று வழிகூறுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த மிரட்டல் குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டுவது உட்பட சிட்னியிலேயே ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து அங்கு தங்களை தாங்களே கயிற்றால் கட்டி கடத்தப்பட்டிருப்பதுபோல எவ்வாறு படமெடுத்து தங்களது பெற்றோருக்கு அனுப்புவது, அதன்பின்னர், பெற்றோர் செலுத்தும் கப்பப்பணத்தை எந்த வங்கிக்கு மாற்றுவது என்ற ஆலோசனை வரை சகலதையும் இந்த இணையத்திருடர்கள் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் என்று நியூ சவுத்வேல்ஸ் பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான கடத்தல் நாடகத்தினால் இதுவரை எட்டு சீன மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறும் நியூ சவுத் வேல்ஸ் பொலீஸார், இந்த வருடம் மாத்திரம் 3.2மில்லியன் டொலர்கள் வரை இந்த கும்பலுக்கு கப்பமாக செலுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மோசடிக்கு எதிராக சீன அரசோடு இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக நியூ சவுத்வேல்ஸ் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
