SKIP TO MAIN CONTENT

வெளிநாட்டில் உங்களுக்கு வருமானம் வருகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

அஸ்திரேலிய வரித் துறை (ATO), புதிய சர்வதேச தரவு பகிர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் வெளி நாடுகளில் எவ்வளவு வருமானமீட்டுகிறார்கள் என்பதை வரித்துறை கண்டுபிடித்துவிடும். உங்கள் வரிக் கணக்கைப் பதிவு செய்யும் போது, வெளி நாட்டு வருமானத்தை சேர்த்துக்கொள்ளவில்லை என்றால்.....

The exterior of the Australian Government Taxation Office in Sydney on Monday, May 28, 2012. (AAP Image/April Fonti) NO ARCHIVING
The Australian Taxation Office in Sydney. Source: AAP

3 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

65ற்கும் மேற்பட்ட நாடுகளுடன், தரவு பகிர்வு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, 100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வைத்திருக்கும் வெளிநாட்டுக் கணக்குகளை வரித் துறை கண்டறிந்துள்ளது. [கட்டுரையை இங்கே காண்க]

சீனா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பல ஆஸ்திரேலியர்கள் நிதி பரிமாற்றம் செய்வதை அந்தத் தரவுகள் காட்டியுள்ளன.

ஆஸ்திரேலிய வரித் துறை இந்தத் தரவைப் பயன்படுத்தும் என்று வரி குறித்து ஆராயும் கணக்காளர்கள் Michael Croker கூறுகிறார்.

“ஆஸ்திரேலியர்களின் வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தானாகவே ATOவுடன் பகிரப்படும், அதனால் வரி செலுத்தவேண்டியோரிடம் ATO தேடி வரும்.”

வரி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது என்று கூறும் வரித் துறையின் உதவி ஆணையர் Karen Foat, வரி செலுத்துவோர் வரி குறித்த விதிகளை அறிந்து கொள்வது முக்கியம் என்கிறார்.

“ஆஸ்திரேலியாவில் குடியிருக்கும் பலர், வெளிநாட்டில் சம்பாதித்த அனைத்தையும் வரிக்கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணரவில்லை.  இதை நாங்கள் அறிவோம்.  சில வேளைகளில், வெளி நாடுகளில் வேலை செய்தவர்கள் அல்லது அங்கு முதலீடு செய்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பி வரக் கூடும், அல்லது குடி வரக் கூடும்.  வெளிநாடுகளில் அவர்கள் வங்கிக் கணக்கு வட்டி ஈட்டலாம் அல்லது வெளிநாட்டு பங்குகள் பணம் சம்பாதிக்கலாம்.  இது போன்றவற்றிலிருந்து நீங்கள் பெறும் எந்த வருமானமும் ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட வேண்டும்.”

ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் உலகின் எந்தப் பாகத்தில் உழைக்கும் அனைத்து வருமானத்தையும் வரிக் கணக்கில் சேர்க்க வேண்டும். 

முதலீடுகள், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுபவை அல்லது வெளிநாட்டில் வேலை செய்ததால் கிடைக்கும் சம்பளம் ஆகியவை அனைத்தும் வெளிநாட்டு வருவாய் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆனால், யாரும் இரண்டு முறை வரி கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை வரித் துறை உறுதி செய்கிறது.  ஏற்கனவே வெளிநாடுகளில் வரி செலுத்தப்பட்ட வருமானத்திற்கு ஆஸ்திரேலிய வரியிலிருந்து விலக்கு வழங்கப்படலாம்.

தமது வெளிநாட்டு வருமானம் குறித்து முதன்முறையாக அறிவிப்பவர்களுக்கு பல வழிகள் உள்ளன.

வரி முகவர் மற்றும் வரித் துறையிடம்  அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று,

வரி குறித்து ஆராயும் கணக்காளர்கள் Michael Croker அறிவுறுத்துகிறார்.

“அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பல உள்ளன. முதல் முறையாக வரிக்கணக்கை சமர்ப்பிக்கிறார்கள் என்றால், உலகளவில் அவர்களின் வருமான ஆதாரங்கள் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். வரி முகவர் இருந்தால் அவரூடாக இதை செய்யலாம். வெளிநாட்டு வருமானத்தை முந்தைய வரிக் கணக்கில் அறிவிக்கவில்லை என்றால், மக்கள் தாமாகவே அவற்றை வெளிப்படுத்துவதை ATO ஊக்குவிக்கிறது. அதன் மூலம் அபராதத்தைக் குறைத்துக் கொள்ள முடியும், அத்துடன் சலுகை விகிதங்களைப் பெற முடியும்.  சில நேரங்களில் இந்த விடயங்களை மக்கள் கவனிக்க மறந்துவிடக் கூடும் என்பதை ATO புரிந்துகொள்கிறது. அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டிருந்தால், 'இந்த நேரத்தில் நாங்கள் கடினமாக நடந்து கொள்ளவில்லை என்றும் எதிர்காலத்தில் வருமான வரிக் கணக்கைத் தயாரித்து தாக்கல் செய்யும்போது அனைத்தையும் வெளிப்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறோம் என்று ATO எச்சரித்து விடலாம்."

 

வெளிநாட்டு முதலீட்டு அலுவலகங்கள் அல்லது வெளிநாடுகளிலுள்ள குடும்பத்தினர் மற்றும் அவர்கள் வங்கிகளிடம் அஸ்திரேலிய வரித் துறை கேள்வி எழுப்பக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.  இருந்தாலும் அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று Michael Croker வலியுறுத்துகிறார்.

"பணம் மற்றும் சொத்துக்களை வெளிநாடுகளில் வைத்திருப்பதில் எந்தப் பிழையும் இல்லை.  இது எப்போதுமே வரி ஏய்ப்பாக இருப்பதில்லை.  சில நேரங்களில் இந்த குடும்ப மற்றும் உள்நாட்டு வங்கிகளிடம் ATO கேள்வி கேட்டாலும் அவை குறித்த விசாரணை முடிந்து சிக்கலானது ஒன்றும் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அத்துடன் அது ஓய்ந்து விடும்."

 

இந்த செயல்முறை குறித்து சரியான விளக்கம் தேவைப்படுபவர்களை, ATOவுடன் நேரடியாக தொடர்பு கொள்ள Karen Foat ஊக்குவிக்கிறார்.

“வரித் துறை மிகவும் பெரியது, அதனுடன் செயற்படுவது பயங்கரமான விடயம் என்று மக்கள் நினைக்கலாம், ஆனால், நாங்கள் உண்மையில் அப்படியானவர்கள் இல்லை, மக்கள் இதைச் சரியாகச் செய்ய உதவுவதற்காகவே நாங்கள் இங்கு செயற்படுகிறோம். எனவே 13 28 61 இல் எங்களை அழையுங்கள்.  உங்களுக்கு மொழிபெயர்ப்பு சேவை தேவை என்றால், 13 14 50 இல் எங்களை அழைக்கவும்.”

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now