Federal Budget 2021: Budget Overview
வரிகட்டுவோருக்கு வரிச்சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது
அரசு இன்று சமர்பித்த நிதிநிலை அறிக்கையில் வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கான சலுகை சலுகை கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவதாக இருந்தது. ஆனால் இது 2022 ஜூன் என்று அடுத்த ஆண்டுவரை தொடரவுள்ளது.
முதல் வீடு வாங்குவோருக்கு சலுகை
New Home Guarantee திட்டத்தில் மேலதிகமாக 10,000 இடங்கள் ஒதுக்கீடு. இத்திட்டத்தின் கீழ் முதல் வீடு வாங்க தகுதி பெறுபவர்கள் வங்கிகளில் கடன் பெற 5% வைப்பு பணம் மட்டுமே செலுத்தினால் போதுமானதாகும் மீதமுள்ள 15% வைப்பு பணத்திற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கும்.
First Home Super Saver Scheme (FHSSS) திட்டத்தின் கீழ் முதல் வீடு வாங்குவதற்கான வைப்பு பணத்தை Superannuationனில் பங்களித்து சேமிக்கும் தொகையின் அளவு 50,000 டாலர்களாக உயத்தப்படுகிறது. இத்திட்டம் ஜூலை 2022ல் நடைமுறைக்கு வர உள்ளது.
Family Home Guarantee திட்டத்தின் கீழ் தகுதி பெறும் single parents இரண்டு சதவீத வைப்பு நிதியுடன் முதல் வீடு வாங்க முடியும்.
குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு கணிசமான சலுகை அறிவிப்பு
குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவ அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு 1.7 பில்லியன் டாலர் கூடுதலாக செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 566 மில்லியன் டாலர் அரசு செலவிடும். இது Childcare Subsidy Scheme என்று அழைக்கப்படும் குழந்தை பராமரிப்பு மானியத் திட்டத்திற்காக செலவிடப்படும். இந்த நிதி உதவி அடுத்த ஆண்டு (2022) ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும்.
குழந்தைகளின் பள்ளிக்கூடத்திற்கு முன்பான ஆரம்பகால கல்விக்கு அதிக நிதி
குழந்தைகள் முழுநேர பள்ளிக்கூடம் செல்லும் முன்பு அவர்கள் செல்லும் preschool கல்விக்கு அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அனைத்து ஆஸ்திரேலிய குழந்தைகளுகும் பாலர் கல்வி பங்கேற்பை ஆண்டுக்கு 600 மணிநேரம் பெறவேண்டும் அல்லது வாரத்தில் 15 மணிநேரம் பெறவேண்டும் என்றவாறு அரசு நேரத்தை அதிகரித்து அதிக நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசு எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு 678 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
குடிவரவு எண்ணிக்கை அதிகரிக்காது
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச எல்லைகள் குறைந்தது அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை மூடப்பட்டிருக்கும் என்பதினால் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை இறங்கு முகமாகவே இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை மேலும் 77 ஆயிரத்தால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25 ஆண்டளவில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 230,000 என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Humanitarian visa program-மனிதாபிமான அடிப்படையில் உள்வங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நிர்ணயித்தது போல 13,750 என்று தொடர உள்ளது.
புதிதாக நாட்டில் குடியேறுவோர் அரசு நிதி உதவிபெற நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் நாட்டில் புதிய குடியேறுகின்ற அனைவரும் அரசு நிதி உதவிபெற நான்கு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கான விதி தளர்வு
2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எல்லைகள் மூடப்பட்டிருக்கலாம் என்பதால் வெளி நாட்டு மாணவர்கள் வரவோ அல்லது தொடர்ந்து படிக்க ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவோ முடியாது என்றாலும், சில மாற்றங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இங்கு இருப்பவர்கள் அதிக வேலை செய்ய முடியும்.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் சர்வதேச மாணவர்கள் இரு வாரங்களுக்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற விதி கைவிடப்படுகிறது. விவசாயம், சுகாதாரம் அல்லது வயதான பராமரிப்பில் பணிபுரிபவர்களுக்கும் இதே போன்ற மாற்றம் செய்யப்பட்டது.
தடுப்பு முகாம்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது
கிறிஸ்மஸ் தீவில் உள்ள புகலிடம் கோருவோர் தடுப்பு மையத்தின் பயன்பாட்டை நீட்டிக்கவும் மற்றும் அங்கு நடக்கும் கலவரங்களைத் தடுக்கவும், அப்படியான கலவரங்கள் நடக்கும் வாய்ப்புகளைக் குறைக்கவும் அரசு நிதி ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக அரசு தற்போதிய நிதி நிலை அறிக்கையில் 464.7 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
JobTrainer திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 500 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும். 163,000 புதிய வேலைகளை உருவாக்கி, இளைஞர்களின் வேலையின்மை 11.8 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அரசாங்கத்தின் பயிற்சி ஊதிய மானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை மையமாகக் கொண்ட JobMaker பணியமர்த்தல் திட்டத்தில், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் வணிகங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட 450,000 என்ற எண்ணிக்கைக்குப் பதிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 வேலைகளை மட்டுமே இந்த ஊக்கத் தொகை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பவன்முறையை தடுக்க அதிக உதவி
வன்முறை உறவுகளில் இருந்து தப்பி ஓடும் பெண்களுக்கு $ 5,000 டாலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த 5,000 டாலர் நிதி உதவி இரண்டு அம்சமாக பிரிக்கப்படுகிறது: 1,500 டாலர் நிதி உதவியாக ஒருவருக்கு தரப்படும்; மேலும் 3,500 டாலர் நிதி வீட்டு வாடகை, சட்ட உதவிக்கான கட்டணம் மற்றும் வீட்டுபொருட்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த மற்றும் அகதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 29.3 மில்லியன் டாலர் செலவிடும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக விசாக்களில் நாட்டில் வாழும் பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கும்பொது அவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டமொன்றுக்கும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசு எதிர்வரும் நிதியாண்டில் 10.3 மில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது.
பெண்களின் உடல் மற்றும் உள நலத்திற்கு அதிக நிதி
பெண்களின் உடல் மற்றும் உளநலம் தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு இதற்காக 354 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (cervical cancer மற்றும் மார்பக புற்றுநோய் (breast cancer) பரிசோதனை திட்டங்களை மேம்படுத்துவதற்காக அரசு 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதனால் 40 வயது முதல் 74 வயதுவரையான பெண்கள் மேமோகிராம் (mammogram service) சேவையை இலவசமாக பெறலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்களுக்கான மனஅழுத்தம் (depression) தொடர்பான சேவைகளுக்கு 47 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார, மனநல சேவைகளுக்கு கூடுதல் நிதி
நாட்டில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கத் தேவையான கட்டுமானங்களுக்கு, கூடுதலாக 1.9 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அரசு அறிவித்தது.
mRNA தடுப்பூசிகளையும் உள்ளூரிலேயே தயாரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு திட்டத்தில் 2.3 பில்லியன் டொலர் கூடுதல் தொகையை அரசு முதலீடு செய்யவிருக்கிறது. மனநோய் தடுப்பு திட்டங்களுக்கு சுமார் 250 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளைத் தடுப்பதற்காக 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும். பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனநல சிகிச்சை மையங்களின் புதிய தேசிய வலையமைப்பிற்கென 1.4 பில்லியன் டொலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு புதிய தேசிய தற்கொலை தடுப்பு பணிமனை அமைக்கப்படும்.
முதியோர் மற்றும் முதியோர் பராமரிப்புக்கு அதிக நிதி
முதியோர் பராமரிப்பு குறித்த royal commission விசாரணையின் பின்னர் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும் முயற்சியில், 17.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. சிறந்த, பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்களை உருவாக்க பெரும்பான்மையான நிதி பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமது வீடுகளில் இருந்து கொண்டே முதியவர் பராமரிப்பைப் பெற, home care packages என்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80,000 பேர் இதனால் பயனடைவார்கள். மொத்தமாக 275,000 பேர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் பயனடைவார்கள்.
முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்பவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அடுத்த மூன்று வருடங்களில் 216 மில்லியன் டொலர்கள் சேவை வழங்குவோரின் பயிற்சிக்காக செலவிடப்படும்.
நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது
ASIO எனப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கு (Australian Security Intelligence Organisation) எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு அரசு மேலும் அதிகமாக 1.3 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 413.8 மில்லியன் டாலர் செலவிட்டு ASIO எனப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் "மிகவும் சிக்கலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதில் நடவடிக்கை எடுக்கும் திறனை” மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.