புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் பூர்வீக குடிமக்கள் பிரிவுகளைச் சார்ந்த பெண்களை மையப்படுத்தி செயல்படும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
வன்முறை உறவுகளில் இருந்து தப்பி ஓடும் பெண்களுக்கு $ 5,000 டாலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த 5,000 டாலர் நிதி உதவி இரண்டு அம்சமாக பிரிக்கப்படுகிறது: 1,500 டாலர் நிதி உதவியாக ஒருவருக்கு தரப்படும்; மேலும் 3,500 டாலர் நிதி வீட்டு வாடகை, சட்ட உதவிக்கான கட்டணம் மற்றும் வீட்டுபொருட்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும். இந்த திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்படுவதால் பரிசோதனை திட்டமாக செயல்பட்டு இதன் வெற்றி பின்பு ஆய்வு செய்யப்படும்.
புலம்பெயர்ந்த மற்றும் அகதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 29.3 மில்லியன் டாலர் செலவிடும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக விசாக்களில் நாட்டில் வாழும் பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கும்பொது அவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டமொன்றுக்கும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசு எதிர்வரும் நிதியாண்டில் 10.3 மில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த பெண்கள் விசா வரம்புகள் காரணமாக சமூக சேவைகளை பெறமுடியாதவர்களாக மற்றும் Centrelink உதவிகளை அல்லது கொடுப்பனவுகளை பெற தகுதியற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம் மூலம், தற்காலிக விசாக்களில் உள்ள பெண்கள் உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற செலவுகளுக்காக $ 3,000 டாலர்வரை உதவி பெற இயலும் என்றவாறு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.