அடுத்த நான்கு ஆண்டுகள் பாலர் பாடசாலைகளுக்கு 1.6 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்பதை அரசு இன்றே உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு சிறாரும் வாரத்திற்கு குறைந்தது 15 மணிநேரம் preschool என்ற பாலர் பாடசாலைக்கு செல்ல நிதி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு தொற்றுநோய் காலத்தில் குழந்தை பராமரிப்பிற்குப் போதிய நிதியை அரசு வழங்கவில்லை என்று விமர்சிக்கப்பட்ட பின்னணியில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.7 பில்லியன் டொலர்களை கூடுதலாக அரசு செலவிடும் என்று அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல், வருடத்திற்கு 566 மில்லியன் டொலர்கள் குழந்தை பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்கு மானியமாக வழங்கப்படும். வருடத்திற்கு 189,390 டொலருக்கும் அதிகமான வருமானம் கொண்டவர்கள் அதிகப்படியாக 10,560 டொலர்கள் மட்டுமே மானியமாகப் பெற முடியும் என்ற வரம்பு நீக்கப்படுகிறது.
ஒரு குழந்தை மட்டும் உள்ளவர்களுக்கு 65 சதவீதமான குழந்தை பராமரிப்பு செலவு மீளக் கிடைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் 95 சதவீதமான செலவு மீளக் கிடைக்கும். இந்த மாற்றங்கள் சுமார் 250,000 குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.
JobTrainer திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 500 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும். 163,000 புதிய வேலைகளை உருவாக்கி, இளைஞர்களின் வேலையின்மை 11.8 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் பயிற்சி ஊதிய மானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகமல்லாத உயர் கல்வி நிறுவனங்களுக்கு 21 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5,000 கூடுதல் Short Term courses என்ற குறுகிய பாட நெறிகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.
இளைஞர்களை மையமாகக் கொண்ட JobMaker பணியமர்த்தல் திட்டத்தில், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் வணிகங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட 450,000 என்ற எண்ணிக்கைக்குப் பதிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 வேலைகளை மட்டுமே இந்த ஊக்கத் தொகை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மாணவர்களை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள், Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாகத் தொடர்ந்து போராட வாய்ப்புள்ளது. இருந்தாலும் அதற்குப் பதிலளிப்பது போல் இந்த நிதி நிலை அறிக்கையில் பல்கலைக்கழகங்களுக்குக் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.
2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எல்லைகள் மூடப்பட்டிருக்கலாம் என்பதால் வெளி நாட்டு மாணவர்கள் வரவோ அல்லது தொடர்ந்து படிக்க ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவோ முடியாது என்றாலும், சில மாற்றங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இங்கு இருப்பவர்கள் அதிக வேலை செய்ய முடியும்.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையில் சர்வதேச மாணவர்கள் 40 மணிநேரம் வேலை செய்வதற்கான பதினைந்து வார வரம்பு நீக்கப்படும்.
விவசாயம், சுகாதாரம் அல்லது வயதான பராமரிப்பில் பணிபுரிபவர்களுக்கும் இதே போன்ற மாற்றம் செய்யப்பட்டது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.