முதியோர் பராமரிப்பு குறித்த royal commission விசாரணையின் பின்னர் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும் முயற்சியில், 17.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
சிறந்த, பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்களை உருவாக்க பெரும்பான்மையான நிதி பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமது வீடுகளில் இருந்து கொண்டே முதியவர் பராமரிப்பைப் பெற, home care packages என்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 80,000 பேர் இதனால் பயனடைவார்கள். மொத்தமாக 275,000 பேர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் பயனடைவார்கள். இந்த நிதியைப் பெற கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுமார் 100,000ற்கும் அதிகமானோர் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முதியோருக்கும் பராமரிப்பு வழங்கப்படும் நேரம் அதிகரிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்கு முன்னர், முதியோர் இல்லத்தில் குடியிருப்போர் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் 20 நிமிட பராமரிப்பு பெறவும், செவிலியருடன் 40 நிமிடங்கள் செலவிடவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்பவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அடுத்த மூன்று வருடங்களில் 216 மில்லியன் டொலர்கள் சேவை வழங்குவோரின் பயிற்சிக்காக செலவிடப்படும்.
முதியோர் பராமரிப்பு வழங்குநர்களின் செயல் திறனை தெளிவுபடுத்துவதற்காக ஒரு புதிய நட்சத்திர மதிப்பீட்டு முறை (star rating system) அறிமுகப்படுத்தப்படும், இதற்காக 200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.