நாட்டில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கத் தேவையான கட்டுமானங்களுக்கு, கூடுதலாக 1.9 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அரசு இன்று அறிவித்தது.
ஐம்பது வயதிற்குக் குறைவானவர்களுக்கு உள்ளூரிலேயே CSL நிறுவனத்தால் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்பூசி ஏற்றதாக அமையுமா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளதால், mRNA தடுப்பூசிகளையும் உள்ளூரிலேயே தயாரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால், ஒதுக்கப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை பணம் mRNA தடுப்பூசி தயாரிப்பில் செலவிடப்படும் என்றோ அல்லது எப்படி செலவிடப்படும் என்றோ விபரங்கள் வெளியாகவில்லை.
சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் போன்ற COVID தொடர்பான சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் மேலும் 1.5 பில்லியன் டொலர் செலவழிக்கிறது.
தேசிய மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு திட்டத்தில் 2.3 பில்லியன் டொலர் கூடுதல் தொகையை அரசு முதலீடு செய்யவிருக்கிறது.
இந்தத் தொகை, ஐந்து முக்கிய துறைகளில் பகிரப்படும்.
மனநோய் தடுப்பு திட்டங்களுக்கு சுமார் 250 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் ஒரு புதிய ஆலோசனை மருத்துவ ஆதரவு மற்றும் பரிந்துரைகளை வழங்கும் இணைய தளம் ஒன்றும் அறிமுகமாகவிருக்கிறது.
தற்கொலைகளைத் தடுப்பதற்காக 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும். தற்கொலை முயற்சி செய்பவர்கள் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவருக்கும் ஆதரவு வழங்க, மாநில மற்றும் பிராந்திய அரசுகளுடன் ஃபெடரல் சுகாதாரத்துறை இணைந்து செயலாற்றப் போகிறது.
பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனநல சிகிச்சை மையங்களின் புதிய தேசிய வலையமைப்பிற்கென 1.4 பில்லியன் டொலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள் - குறிப்பாக பூர்வீக குடியின மக்களுக்கு சேவை வழங்குவதற்காக 107 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும்.
செவிலியர்கள், உளவியல் வல்லுநர்கள் மற்றும் மனநல ஆலோசனைக் கூடங்களில் பணிபுரியும் சுகாதார பயிற்சியாளர்களுக்கு மேலதிக உதவித்தொகை மற்றும் மருத்துவ வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 202 மில்லியன் டொலர்களை மேலதிகமாக அரசு ஒதுக்கியுள்ளது.
ஒரு புதிய தேசிய தற்கொலை தடுப்பு பணிமனை அமைக்கப்படுவதாகவும் கருவூலக்காப்பாளர் அறிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.