பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைநகர் கன்பெராவில் Governor-General David Hurley அவர்களை நேரில் சந்தித்து தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டுகொண்டார். பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் உறுதி செய்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் தொற்றுடன் மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்த பின்னணியிலும், காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு என்ற இயற்கை அனர்த்த பின்னணியிலும், உக்ரைன் உள்ளிட்ட போர் சூழலிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீனாவின் மறைமுகத் தடை நிலையிலும் மக்கள் இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
சுகாதாரம், பொருளாதராம், பாதுகாப்பு என்று மூன்று முக்கிய அமசங்கள் இந்த தேர்தலில் அதிக கவனத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நாடு நிச்சயமற்ற சூழலை சந்திக்கும் இவ்வேளையில் மக்களின் தெரிவு ஆளும் கூட்டணியாகவே இருக்கவேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரதமராக ஜான் ஹோவர்ட் அவர்களுக்குப்பின் எந்த பிரதமரும் தொடர்ந்து தொடர்ந்து இருமுறை தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த தேர்தலை எதிர்கொள்கிறார். கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற அவர் இம்முறையும் வெற்றிபெற்று சாதனை படைக்க முயற்சிக்கிறார்.
அதே வேளையில், 2019 ஆம் ஆண்டு எதிர்கட்சியான லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ஆந்தனி அல்பனீசி அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசை அமைக்க முயற்சிக்கிறார்.
கடந்த சில மாதங்களாக வந்துகொண்டிருக்கும் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் எதிர்கட்சியான லேபர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆனாலும், எதிர்கட்சியாக இருந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெறுவது எளிதல்ல என்று லேபர் கட்சியின் தலைவர் ஆந்தனி அல்பனீசி கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
