SKIP TO MAIN CONTENT

பிரியா குடும்பத்தின் சட்ட செலவீனங்களுக்கென $200,000 வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

The Biloela family marking Nades's birthday on Christmas Island in December 2019.
The Biloela family marking Nades's birthday on Christmas Island in December 2019. Source: Supplied

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் குடும்பத்தின் சட்டப்போராட்டம் தொடர்கின்றநிலையில், இவர்களுக்கான சட்ட செலவீனங்களுக்கான நட்டஈடாக சுமார் 2 லட்சம் டொலர்களை அரசு வழங்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியா-நடேஸ் தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. குறிப்பாக தருணிகாவின் விண்ணப்பத்திற்கு procedural fairness காண்பிக்கப்படவில்லை என நீதிபதி Mark Moshinsky   தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குறித்த விவகாரத்தில் பிரியா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களுக்கென 206,934 டொலர்களை அரசு வழங்கவேண்டுமென நீதிபதி Mark Moshinsky  தெரிவித்திருக்கிறார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா மற்றும் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் சுமார் ஒன்றரை வருடங்களாக மெல்பேர்னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில்இ சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுஇ பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் தீர்ப்புவழங்குவதற்கு கால அவகாசம் எடுத்து தீர்ப்பினை வழங்கியது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில் கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now