தெற்கு ஆஸ்திரேலியாவின் Limestone Coast பகுதியில் பல்வேறு விதங்களில் சேதங்களை ஏற்படுத்திவரும் காட்டு மான்கள் கட்டம் கட்டமாக கொல்லப்பட்டுவரும் நிலையில், இவை முன்பை விட அதிகமாக தெற்கு நோக்கிப் பயணிப்பதாக இப்பகுதியில் காட்டு மான்களை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள Limestone Coast Landscape Board தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விலங்குகள் தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு Wattle Range பகுதியில் ஒரு சிறிய சோதனையை மேற்கொண்டதாகவும், தாம் எதிர்பார்த்ததை விட பெரிய எண்ணிக்கையான காட்டு மான்களைத் தாம் அவதானித்ததாகவும் இவ்வமைப்பின் பொது மேலாளர் Steve Bourne, ABC-இடம் கூறினார்.
இதையடுத்து காட்டு மான்களைக் கொல்லும் திட்டத்தை இந்த ஆண்டு தாம் விரிவுபடுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
"தெற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 24,000 காட்டு மான்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள பின்னணியில், இவை பண்ணை மற்றும் நில உரிமையாளர்களுக்கு பரந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக Livestock SA திட்ட மேலாளர் Pene Keynes கூறியுள்ளார்.
காட்டு மான்கள், நில உரிமையாளர்களின் மேய்ச்சல் நிலங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சாலைவிபத்துகளுக்கும் இவை காரணமாக இருப்பதாகவும், பூர்வீக விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளைக் காவிச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப்பின்னணியில் கடந்த இலையுதிர் காலத்தில் 2,000 க்கும் மேற்பட்ட மான்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தன.
Limestone Coast பிராந்தியத்தின் 477,942 ஹெக்டேர்களுக்கும் அதிகமான தனியார் சொத்துக்கள், வன இருப்புக்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற பகுதிகளிலிருந்த காட்டு மான்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டன.
ஆனால் இந்த திட்டம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றபோதிலும், காட்டு மான்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக Steve Bourne குறிப்பிட்டார்.
காட்டு மான்களை ஒழிக்கும் திட்டத்தில் மேலும் பல நில உரிமையாளர்கள் இணைந்துகொள்வது நன்மையளிக்கும் எனவும், 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இலையுதிர்கால நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 40 சதவீதம் அதிகமான நில உரிமையாளர்கள் பதிவு செய்திருந்ததாகவும் Limestone Coast Landscape Board தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
