வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதென்றால் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா?
நாட்டில் புதிதாக குடியேறிய பலர் வீடுகளில் ஏற்படக்கூடிய தீவிபத்துக்கள் பற்றி முழுமையான விளக்கமின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளில் ஏற்படும் தீபத்து காரணமாக ஆஸ்திரேலியாவில் ஆண்டொன்றுக்கு 50 பேர் மரணமடைகின்ற அதேநேரம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மோசமான தீக்காயங்களுக்குள்ளாவதாக Fire Protection Association Australia தெரிவித்துள்ளது.

Source: AAP
தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக 000 என்ற அவசர சேவை இலக்கத்தின் ஊடாக அழைக்கப்பட வேண்டியவர்கள் தீயணைப்புத் துறையினர் ஆவர்.
எனினும் ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டிராதவர்கள் ஆபத்து நேரங்களில் அவசர சேவைகளைத் தொடர்பு கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படியானவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளும் தம்மிடம் இருப்பதாக இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தீயணைப்புத் துறையினரை மக்கள் அழைக்கத் தயங்குவதற்கு மற்றுமொரு காரணம் அவர்கள் அணியும் சீருடையை வைத்து அவர்களும் இராணுவம் அல்லது காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என நினைத்து தயங்குவதாகும்.
ஆனால் இது முற்றிலும் தவறு. தீயணைப்புத் துறை என்பது ஒரு தனிப்பிரிவாகும்.

Source: AAP
அடுத்த காரணம் தீயணைப்பு துறையினரை அழைத்தால் பணம் செலுத்த வேண்டியிருக்குமென பலர் நினைப்பது. அத்துடன் முன்பின் தெரியாத தீயணைப்பு வீரர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கு பலர் தயங்குவதுமுண்டு.
இவையிரண்டும் தவறான கருத்துக்கள். அவர்கள் பணம் எதுவும் அறவிடுவதில்லை அத்துடன் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.
வீடுகளில் பெரும்பாலும் தீ ஆரம்பிக்கும் இடம் சமையலறையாகும். எனவே நெருப்பை அவதானமாகக் கையாண்டு பாதுகாப்பான முறையில் சமைப்பது அவசியமாகும்.

Source: AAP
உதாரணமாக அடுப்பின் மீது சிந்தும் சிறுதுளி எண்ணெய் தீயை ஏற்படுத்தக்கூடும். உடனடியாக தண்ணீரை ஊற்றினால் அத்தீ அணைந்து விடும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது மிகப்பெரும் தவறு.
ஒரு நாளும் எண்ணெயால் ஏற்பட்ட தீ மீது தண்ணீர் ஊற்றக் கூடாது. பதிலுக்கு சமையலறையின் கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு வீட்டைவிட்டு வெளியேறி 000 என்ற இலக்கத்தை அழைத்து தீயணைப்பு உதவிகளைக் கோர வேண்டும்.
இதேவேளை சிறியளவான தீவிபத்துக்களின் போது பாவிப்பதற்கென ஒரு Fire blanket மற்றும் fire extinguisher ஆகியவற்றை வீடுகளில் வைத்திருப்பது மிகவும் நல்லது. Fire blanket என்பது போர்வை போன்றது. சிறிய தீயின் மீது அதனைப் போர்த்தி விட்டால் தீ பரவுவது தடுக்கப்படும். அதேபோன்று fire extinguisher க்குள் இருக்கும் பதார்த்தம் தீயை கட்டுப்படுத்த உதவும். இவற்றை உங்கள் வீடுகளில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக உங்கள் வீடுகளிலுள்ள Smoke Alarm ஒழுங்காக வேலை செய்கிறதா என்று உறுதிப்டுத்திக் கொள்ளுங்கள்.இது உங்களது உயிரைப் பாதுகாக்கும் முக்கிய கருவி.

Source: AAP

Source: AAP
நீங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் Smoke Alarm இல்லையென்றால் வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு அதைப் பொருத்தச் சொல்லுங்கள். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் Battery மாற்றி அதை ஒழுங்காகப் பராமரியுங்கள். Smoke Alarm வீடுகளில் பொருத்தப்பட்டிருக்க வேண்டுமென்பது பெரும்பாலான மாநிலங்களில் சட்டமும் கூட.
குளிர்காலம் வந்துவிட்ட பின்னணியில் உங்கள் வீடுகளின் Heater களையும் அவதானமாகக் கையாளுங்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் மெழுகுதிரிகளைப் பாவிப்பவர்கள் என்றால் அவற்றை அணைக்க மறவாதீர்கள். ஒரு நாளும் அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு அப்பால் செல்ல வேண்டாம். இவை உட்பட இன்னும் வேறு என்ன வழிகளிலெல்லாம் தீ ஏற்படக்கூடுமென நினைக்கிறீர்களோ அவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Source: AAP
தீ ஏற்படும் சமயத்தில் உடனடியாக 000 என்ற இலக்கத்துக்கு அழைத்து உங்களால் வேறு எதுவும் பேச முடியவில்லை என்றாலும் Fire என்ற வார்த்தையைச் சொல்லுங்கள்.
தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மேலதிக விபரங்களுக்கு என்ற www.fire.nsw.gov.au இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

Source: AAP