SKIP TO MAIN CONTENT

பணியிட கடனட்டையில் மகனுக்கு பீட்ஸா! வேலையிழந்த Toyota முகாமையாளர் நட்டஈடு கோரி வழக்கு!

Pizza
File photo Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

Toyota நிறுவன கடனட்டையில் மகனுக்கு ஒரு துண்டு பீட்ஸா வாங்கிக்கொடுத்த காரணத்தினால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்படும் அந்நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர், Toyota நிறுவனத்திடம் மூன்று லட்சம் டொலர் நட்ட ஈடு கோரி வழக்கு தொடுத்துள்ளதாக The Australian செய்திவெளியிட்டுள்ளது.

சுமார் இருபது வருடங்களாக Toyota நிறுவனத்தில் பணிபுரிந்த Greg Sherry, நிறுவன கடனட்டையை தனது தனிப்பட்ட செலவிற்கு பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

நீண்டகால பணியாளர் என்ற அடிப்படையில் அவர் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றால் $379,268 நிதிப்பொதியை (redundancy payout) பெற்றுக்கொள்ளத்தகுதியாவதற்கு முதல் நாள், அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

2018 ஆம் ஆண்டு சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தபோது Greg Sherry, தனது குடும்பம் முழுவதற்குமான விமானச்செலவு - ஹோட்டல் செலவு ஆகியவற்றை நிறுவன கடனட்டையில் செலுத்தியிருந்தார் என்று Toyota  குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், Greg Sherry அதனை மறுத்திருக்கிறார். மெல்பேர்னில் தங்கியிருந்த ஒருநாள் இரவு வெளியில் சாப்பாட்டுக்காக சென்றபோது நிறுவன கடனட்டையில் $32.50 செலவில் பீட்ஸா வாங்கியிருக்கிறார் என்று Toyota நிறுவனம் நடத்திய உள்ளக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பீட்ஸாவை முழுவதுமாக உட்கொண்டாரா என்று கேட்கப்பட்ட கேள்வியின்போது, தான் சாப்பிட்ட மிகுதியில் ஒரு துண்டை தனது மகன் சாப்பிட்டதாக Greg Sherry கூறியுள்ளார்.

Toyota கடனட்டையில் குடும்ப உறுப்பினருக்கு செலவு செய்தது அந்த பீட்ஸா துண்டுக்குரிய பணம் மாத்திரமே என்று Greg Sherry ஒப்புக்கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் நிறுவன கடனட்டையை தனிப்பட்ட செலவுக்கு Greg Sherry பயன்படுத்தியிருக்கிறார் என Toyota குற்றம்சாட்டியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் மெல்பேர்னில் தேவைக்கு அதிகமாக அடுத்த நாளும் ஹோட்டலில் Greg Sherry தங்கியிருந்திருக்கிறார் என்றும் அவர் நிறுவன கடனட்டையில் இணையத்தை பயன்படுத்துவதற்கான Dongle வாங்கியிருக்கிறார் என்றும் இதனால் கடனட்டையில் அதிக பணம் செலவாகியிருக்கிறது என்றும் Toyota நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் மெல்பேர்னில் தங்கியிருந்த காலப்பகுதி Australian Open Tennis ஆட்டங்கள் நடைபெற்றதால், ஹோட்டல் செலவு அதிகமே தவிர, தான் மேலதிகமாக எந்தச்செலவும் செய்யவில்லை என்று Greg Sherry மறுப்பு தெரிவித்துள்ளார்.

Greg Sherry பதவி நீக்கம் செய்யப்படும்போதும் அவருக்கு Toyota  நிறுவுனம் $78,039 சேவைக்காலக்கொடுப்பனவாக கொடுத்து அனுப்பியிருக்கிறது.

ஆனால், தனது பதவி நீக்கம் முறைகேடான வகையில் இடம்பெற்றது என்பதை காரணம் காண்பித்து மூன்று லட்சம் டொலர் நட்ட ஈடு கோரி Greg Sherry நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now