விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக இனங்காணப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை புதிதாக தொற்றுக்குள்ளானவர்களில் East Preston Islamic College மாணவர் ஒருவரும் அடங்குவதையடுத்து அவருடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட மெல்பேர்னின் 5 Suburbs-ஐச் சேர்ந்த சுமார் 500 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 73 மாணவர்களும் அடக்கம்.
Dallas, Roxburgh Park, Broadmeadows, Preston, West Heidelberg ஆகிய Suburbs-ஐச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவரின் சகோதரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தலில் இருந்த இம்மாணவர் கோவிட் சோதனை முடிவு வரமுன்னரே பள்ளிக்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய பரவலையடுத்து, இவ்வார இறுதியில் மேலதிக கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மெல்பேர்னில் கடந்த 14 நாட்களில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்களின் மொத்த சராசரி தற்போது 6.1 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
