ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையிலான விமானப்போக்குவரத்து எதிர்வரும் ஜுலை முதல் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து சர்வதேச விமானப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து இருநாடுகளும் தமது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்கின்றன.
இதன்படி முதற்கட்டமாக கன்பரா-வெலிங்டன் இடையிலான விமானப்பயணத்தை ஜுன் 1,2 திகதிகளில் ஆரம்பிப்பதற்கு Australian Chamber of Commerce and Industry, Canberra Airport, Wellington Chamber of Commerce, Canberra Business Chamber மற்றும் Auckland Business Chamber ஆகியன இணைந்து திட்டமிட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு இருநாட்டு அரசுகளும் ஒப்புதல் வழங்கியதையடுத்து இது நடைமுறைப்படுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செல்பவர்கள் தம்மை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் பயணம் செய்வதற்கு முன்னதாக COVID-19 சோதனை செய்துகொள்ள வேண்டும்.
இதேவேளை ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள் தமது எல்லைகளைத் தொடர்ந்தும் மூடியே வைத்திருப்பதால், வெலிங்டனிலிருந்து கன்பரா வருபவர்கள் ACT-க்குள் பயணம் செய்யும் அதேநேரம் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு செல்வதற்கான தெரிவு மாத்திரமே தற்போது இருக்கிறது.
ஆனால் வெலிங்டன் செல்லும் ஆஸ்திரேலியர்கள் நியூசிலாந்து முழுவதும் பயணம் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
