மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,700 பேருக்கு, ஆஸ்திரேலிய அரசு வழங்கிய 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மனுஸ் தீவில் 2012 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை தடுத்து வைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், ஆஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கெதிராக Class Action எனப்படும் கூட்டு சட்டநடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த வழக்கு விக்டோரிய நீதிமன்றில் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே, மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சுமார் 70 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்த நிலையில், இதற்கான அனுமதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி குறித்த தொகைப்பணம் எதிர்வரும் ஜுன் 15ம் திகதிக்கு முன்னர் 1693 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டியுள்ள நிலையில் பெரும்பாலானோர் பணத்தைப் பெற்றுவிட்டதாகவும் இன்னமும் 340 பேருக்கு மாத்திரமே வழங்கப்படவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்றிருந்த இவ்வழக்கு, அரசு நஷ்டஈடு வழங்க முன்வந்ததன் காரணமாக எதிர்வரும் 30ம் திகதி விக்டோரிய நீதிமன்றினால் முடித்துவைக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றிலேயே மனித உரிமைகளை அடிப்படையாக வைத்து நஷ்டஈடு வழங்கப்பட்ட, முதலாவது மிகப்பெரிய சம்பவமாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
