1978ம் ஆண்டு, ஜூலை மாதம் 25ம் நாள் நள்ளிரவுக்கு சற்று முன்னர், ஓல்ட்ஹாம் (Oldham) பொது மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பிறப்ப்பை ஊடகங்கள் ஊதி பெருப்பிக்காமல் இருப்பதற்காக, அந்த மருத்துவ மனையே அமைதியாக ஏதும் பெரிதாக நடக்காததைப் போல நடந்து கொண்டிருந்தது. இரண்டரை கிலோகிராம் எடையுள்ள பெண் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் (Louise Joy Brown) பிறந்த போது மனிதன் விஞ்ஞான வளர்ச்சியில் இன்னொரு படி எடுத்து வைத்தான். அந்தக் குழந்தையின் நிழற்படத்தைப் பிரசுரிக்க Daily Mail என்ற ஊடகம் சுமார் ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை அந்தக் குடும்பத்திற்கு வழங்கியிருந்தது.

இது நடப்பதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், பேட்ரிக் ஸ்ரெப்டோ (Patrick Steptoe), ராபர்ட் எட்வர்ட்ஸ் (Robert Edwards) மற்றும் ஜீன் பர்டி (Jean Purdy) என்ற மூன்று வைத்தியர்கள் நடத்திய செயற்கை கருத்தரித்தல் அல்லது IVF என்ற பரிசோதனை முயற்சியில் லூயிஸின் தாய் லெஸ்லி கலந்து கொண்டிருந்தார். இந்த மூன்று வைத்தியர்கள் 280 பெண்களுடன் இந்த செயற்கைக் கருத்தல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஐந்து பெண்கள் மட்டுமே கருத்தரித்தார்கள்.

செயற்கை கருத்தரித்தல் அல்லது IVF (In vitro fertilization) அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கைக் கல முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும். இவ்வாறு கரு முட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அந்தக் கரு வளர்ந்து முளையமாகி அப்பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாகக் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாகச் சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம். இம்முறையால் பிறக்கும் குழந்தையைப் பொதுவான பேச்சு வழக்கில் "சோதனைக்குழாய்க் குழந்தை" என அழைப்பார்கள்.
சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

இந்த வாரம் லூயிஸ் பிரவுன் தனது மகன் ஏடன் (Aiden) மற்றும் வேறு சில IVF குழந்தைகளுடன் தனது நாற்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

லூயிஸ் பிரவுன் பிறந்த சில வருடங்களில், ஆஸ்திரேலியாவின் முதல் IVF குழந்தை, கண்டிஸ் ரீட் (Candice Reed), 1980ம் ஆண்டு, ஜூன் 23ம் நாள் பிறந்தார்.

லூயிஸ் பிரவுனின் தாயார் மற்றும் கண்டிஸ் ரீட்டின் தாயார் இருவருக்கும் இயற்கையாக உருவான கருவைப் பயன்படுத்தித் தான் குழந்தைகள் பெற வைத்தார்கள் வைத்தியர்கள். எனினும், இது குறித்த ஆராய்ச்சி மேன்மேலும் வளர்ந்து இப்பொழுது, இயற்கையாக கரு உருவாகுவதற்கு சிரமப்படும் தாய்மாருக்கும் தாய்ப்பேறு பெறும் வகை செய்யும் அளவிற்கு இந்த ஆராய்ச்சி வளர்ந்துள்ளது.

ஆனால் இதில் ஒரு சோக செய்தியும் இருக்கிறது. லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே IVF மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. சுபாஷ் முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. சுபாஷ் முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து உறை வெப்பநிலையிலும் மிகக் குறைந்த -196 செல்சியஸ் வெப்பநிலையில் 53 நாட்கள் உறைய வைத்து (Cryo-preservation), பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷ் முகர்ஜிக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் IVF குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி. சி. ஆனந்த் குமார், சுபாஷ் முகர்ஜியின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, "உலகிலேயே முதன்முறையாக IVF மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் (Cryo-preservation) மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ் முகர்ஜி தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன” என்று வருத்தம் தெரிவித்து, "Current Science" இதழில் 1997ம் ஆண்டு, விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பது கவலையான செய்தி தானே?
தமிழ்நாட்டில் பிறந்த முதல் IVF குழந்தை Dr கமலா செல்வராஜ் அவர்களது பராமரிப்பில் 1990ம் ஆண்டு பிறந்தார். அவரது பெற்றோர், அந்தக் குழந்தைக்குக் கமலா என்று பெயரிட்டனர். அந்தக் கமலா, 24 வருடங்கள் பின்னர் தானே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த போது (அது இயற்கையாக உருவான குழந்தையாக இருந்த போதும்), அதனை Dr கமலா செல்வராஜ் நடத்தும் மருத்துவமனையிலேயே பெற்றுக் கொண்டாள்.

அரியானாவை சேர்ந்தவர் மொஹீந்தர் சிங் கில் (வயது 79). இவரது மனைவி தல்ஜீந்தர் கவுர் (வயது 70) இவர்களுக்கு திருமணம் ஆகி 46 வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை இல்லாத இந்த தம்பதி சமூகத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்ட நிலையில், விளம்பரம் ஒன்றில் இருந்து செயற்கை முறையில் கருத்தரித்தல் வழியே குழந்தை பெற முடியும் என்பதை அறிந்து அதற்கான முயற்சியில் தம்பதியினர் இறங்கி, கருவுற்ற கவுர் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.

நாற்பது வயதிற்குப் பின் கருவுறுவதால் நூறில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்மையுடன் பிறக்கும் வாய்ப்புகள் உண்டு என்றும், அதுவே 45 வயதிற்கு மேல் கருவுறும்போது இந்த பாதிப்பு 30 குழந்தையில் ஒரு குழந்தைக்கு ஏற்படலாம் என்றும் அறியப்பட்டுள்ளது. அதனால், IVF மூலம் குழந்தை பெறுவதற்கான வயதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வாதம் தற்போது வலுப்பெற்று வருகிறது.