விக்டோரிய மாநிலத் தலைநகர் மெல்பனில் பிரதமர் Scott Morrison அவர்களால் திறந்துவைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை, திறந்துவைக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மெல்பனின் Rowville எனுமிடத்தில் அமைந்துள்ள Australian Indian Community Centre எனும் கட்டிடத்தின் வளாகத்தினுள்ளே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சிலை திறந்துவைக்கப்பட்டது.
ஆறு அடி உயரத்தில், வெண்கலத்தில் 400 கிலோ எடையில் இந்த காந்தி சிலை உருவாக்கப்படுள்ளது. இந்த சிலையை இந்திய அரசு பரிசாக வழங்கியுள்ளது. காந்தி அவர்கள் தடியுடன் நடந்து செல்வதுபோன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலை, நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டிருப்பதாக இந்த நிறுவப்பட்டிருக்கும் Australian Indian Community Centreஐ உருவாக்கிய Australian Indian Community Charitable Trust (AICCT) அமைப்பின் தலைவர் வாசன் சீனிவாசன் கூறினார்.
சிலையின் கழுத்தை துண்டிக்க சிலர் முயற்சித்திருக்கக்கூடுமென்றும் ஆனால் வெண்கலத்தில் உருவான சிலை இது, அதை வெட்டுவது எளிதல்ல என்பதால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றும் ஆனால் சிலையின் கழுத்தில் ஐந்து அல்லது ஆறு மில்லிமீட்டர் அளவு வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் சீனிவாசன் கூறினார்.
போலீசார் வந்து முதற்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளனர். ஆனால் நேற்று இரவு மழை பெய்ததால் தடயங்களை சேகரிப்பது எளிதாக இருக்கவில்லை என்று சீனிவாசன் SBS செய்தியிடம் தெரிவித்தார்.
இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் பின்னணியில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்களின் சிலையை விக்டோரியாவில் நிறுவ தாம் முயற்சித்து அதில் வெற்றி பெற்றோம் என்றும் அவர் தெரிவித்தார். விக்டோரியா மாநிலத்தில் இந்தியப் பின்னணி கொண்ட சுமார் மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்படுகிறது.
மகாத்மா காந்தி அவர்களின் சிலை முதலில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் பின்னர் குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் நிறுவப்பட்ட பின்னணியில் தற்போது விக்டோரியா மாநிலத்திலும் நிறுவப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.