தனது துணிகரமான செயலினால் பொதுமக்கள் பலரை ஆயுததாரியின் பிடியிலிருந்து மீட்டுவிட்டு உயிர் துறந்த காவல் அதிகாரி ஒருவருக்கு ஃபிரான்ஸ் மக்கள் உணர்வுபூர்வ அஞ்சலிகளைச்செலுத்திவருகின்றனர்.
ஃபிரான்ஸின் தென்பகுதி நகரான Carcassonne அருகே Trebes என்ற சிறு நகரில் 'சுப்பர் யூ' வணிகக்கட்டடத்தினுள் ஆயுததாரியிடம் பணயக்கைதிகளாகப் பலர் சிக்கிக்கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரி லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame, 44, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

IS அமைப்பின் உறுப்பினர் என்கூறிக்கொண்ட இளைஞர் ஒருவரால் வணிகக்கட்டடத்தினுள் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பணயக்கைதிகளாக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவராக சுடப்படும் ஒரு பயங்கர சூழ்நிலையில், இந்தக் காவல்துறை அதிகாரி துணிகரமாக உள்ளே நுழைந்தார் என்று கூறப்படுகிறது. அதுவரை, பெண் ஒருவரைத் தன்னோடு மனித கேடயமாக வைத்திருந்த தாக்குதலாளியை நெருங்கி, அந்தப்பெண்ணின் இடத்துக்கு தன்னை தானே ஒரு பணயக்கைதியாக்கிக்கொள்ள தாக்குதலாளியை இணங்கச்செய்துள்ளார் அவர். அதன் மூலம் அந்தப் பெண்னை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றிவிட்டு தாக்குதலாளியின் பிடியில் சிக்கிக்கொண்ட அவர், தனது கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் அங்கு மறைத்து வைத்துக்கொண்டதன்மூலம் வெளியே முற்றுகை இட்டிருந்த தனது சக படை அணியினருக்கு உள்ளே நடக்கும் பேரம்பேசல்கள் தெளிவாக கேட்கவும் அதன்படி தந்திரோயாயமாக செயற்படவும் உதவியிருக்கிறார்.
விசேட படைகள் உள்ளே நுழையும் வரை, தாக்குதலாளியின் பிடியில் இருந்தவாறு பணயக்கைதிகள் பாதுகாப்பாக தப்பிக்க உதவிய அவர், தாக்குதலாளியால் பலதடவைகள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டிருக்கிறார். சுமார் நான்கு மணிநேரம் நீடித்த இந்த முற்றுகை விசேட படையினரால் தாக்குதலாளி சுட்டுக்கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. உயிராபத்தான நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட காவல்துறை அதிகாரி பின்னர் ஹெலிக்கொப்டரின் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசரசிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் உத்தரவுகளுக்குப் புறம்பாக பெரும் தற்துணிவுடனும் தியாகத்துடனும் செயற்பட்டு பொதுமக்கள் பலரைப்பாதுகாத்து உயிர் துறந்த இந்தக் காவல்துறை அதிகாரியை, ஓரு மாவீரன் என வர்ணித்திருக்கிறார் ஃபிரெஞ்சு அதிபர் எமானுவல் மக்ரோன்.
தமிழில் செய்தி: பாரிஸ் நகரிலிருந்து கார்த்திகேசு குமாரதாசன்.
