ஆஸ்திரேலிய செய்திச்சேவைகளை Google தொடர்ந்து பயன்படுத்திவரும் பட்சத்தில், செய்திச்சேவைகளின் உரிமையாளர்களான media ‘பொதுசன ஊடகங்களுக்கு’ Google பணம் செலுத்தவேண்டும் என்ற சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது பற்றியும் இதனால் Google ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறக்கூடும் என்பதுபற்றியும் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் Scott Morrison மற்றும் கருவூலக்காப்பாளர் Josh Frydenberg ஆகியோர் Google இன் CEO, சுந்தர் பிச்சை அவர்களுடன் இப்பிரச்சனை குறித்து பேசியதைத் தொடர்ந்து, சுமுகமான தீர்வு ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை, அரசியல் வட்டாரங்களிலும் வர்த்தக வட்டாரங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இருந்தபோதும், Google இன் ‘search engine’ தேடல் இயந்திரத்திற்கு பதிலாக நாம் சுயமாக அரசு சார்ந்த அல்லது தனியார் துறை சார்ந்ததாக ஒரு search engine ஐ தேடல் இயந்திரத்தை ஏன் கட்டி எழுப்பக் கூடாது என்ற கருத்துக்கள் இப்போது பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. Greens கட்சி இந்த மாற்று ஏற்பாடு பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.

அதேபோல, இந்த தேடல் இயந்திரம் தொடர்பாக நிபுணத்துவம்பெற்ற சில உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள், இது ஒரு நல்ல யோசனை என்று கூறி வருகிறார்கள். Google இன் monopoly என்ற ஏகபோக தனியுரிமையை ஒழிக்க, ஆஸ்திரேலியா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள், மற்றும் அமெரிக்கா என்பன Google இன் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த திட சங்கற்பம் கொண்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள். தனிமனித இறையாண்மையைப் பாதுகாக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆஸ்திரேலியா இந்த தேடல் யந்திரத்தை நிறுவி அதை தேசியமயமாக்கவேண்டும் என்று Gigablast என்ற நிறுவனத்தைச்சேர்ந்த Matt Wells கூறுகிறார்.
போதுமான நிதியை ஒதுக்கக் கூடிய பட்சத்தில் ஆஸ்திரேலியா சொந்த search engine ஐ நிறுவ முடியுமா அது எவ்எளவு வெற்றிகரமாக செயல்படும் என்ற கேள்விகள் பல மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
2000-2010 ஆண்டு காலப்பகுதியில் பல நாடுகள் தமது சொந்த தேடல் இயந்திரங்களை நிறுவ முனைந்தன. 2005 இல் பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து GOOGLE இற்கு ஐரோப்பாவின் போட்டி தேடல் தளமாக 700 மில்லியன் டாலர்கள் செலவில் Quaero என்ற தேடல்தளத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறுவப்போவதாக அறிவித்தன. இந்த திட்டம் 2010 இல் முழுமை பெறும் என்ற நிலையில், 2010 ஆம் ஆண்டு நெருங்கும் போது Google போன்ற தனியார் தேடல் இயந்திரங்கள் பல நூறுமடங்கு வளர்ச்சிகண்டுவிடும்; முன்னேறிவிடும் என்பது சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து Germany இந்த திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டது. 2006 இல் ஜப்பான் தனியார் துறையுடன் இணைந்து ஒரு தேடல் இயந்திரத்தை உருவாக்க பல மில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.
ரஷ்யா 2014 இல் Sputnik என்ற பெயரில் அரசு சார்ந்த தேடல் இயந்திரம் ஒன்றை ஆரம்பித்தது. ஆனால் இதை மக்கள் பயன்படுத்த முன் வரவில்லை.

ஒரு தேடல் யந்திரத்தை நிறுவுவது அவ்வளவு கடினமா?
நிதி மட்டும் என்று பார்க்கும்போது 1000 கோடி தொடக்கம் 3000 கோடி டாலர்கள் தேவைப்படும் என்று இங்கிலாந்தில் UK competition authority என்ற அமைப்பு கணித்திருக்கிறது. Google மற்றும் Microsoft இன் Bing என்ற தளங்கள் மட்டுமே தமது தளங்களின் indexes என்ற சுட்டிகளை பராமரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் பலகோடி டாலர்களை வருடாந்தம் செலவிடுகின்றன.
Search engine என்ற தேடல் இயந்திரம் மூன்று செயல்பாடுகளை ஒன்றிணைக்கிறது. Crawling என்ற முறையில் சுட்டிகளை சதா புதிது படுத்திக்கொண்டிருப்பது; Keyword என்ற பிரதான சொல் அடிப்படையில் அல்லது முக்கியத்துவத்தின் அடிப்படையில் சுட்டிகளை ஒழுங்கு செய்வது; தேடலின்போது மிகச்சிறந்த விடையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க சுட்டிகளைப் பயன்படுத்துவது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, 2000 மாம் ஆண்டில் Google வசம் 100 கோடி சுட்டிகள் இருந்தன. இப்போது அதன் எண் ணிக்கை சுமார் 60000கோடி என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவு அதை அபிவிருத்தி செய்ய மிகப் பெருந்தொகை நிதி வருடாந்தம் செலவிடப்படவேண்டும் என்று வாஷிங்டனிலுள்ள software நிபுணர் Zack Mario கூறுகிறார். இதனால் பல புதிய தேடல் தளங்கள் இந்த அளவு நிதியை செலவிடமுடியாத நிலையில் ஆரம்பித்த கையோடு காணாமல் போய்விட்டன என்கிறார் அவர்.
ஆனால் சரியாக திட்டமிட்டால் சுமார் 200 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களில் ஆரம்பிக்க முடியும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். Mojeek என்ற தேடல் தளத்தை இங்கிலாந்தில் நடத்தும் Colin Hayhurst, இப்போது server களின் விலை மிகக் குறைந்துவிட்டது; Google தனது தளங்களை அமைக்கும்போது விலை அதிகமாகவே இருந்திருக்கும் . அத்தோடு வேறு யாரும் தனக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காக Google இது தொடர்பான முதலீடு குறித்து மிக அதிக பட்சமாகவே கூறிவருகிறது என்கிறார் அவர்.

இப்படி குறைந்த செலவில் நிர்மாணிக்கப்படும் தளங்கள் Google இற்கு நிகரானதாக இருக்குமா?
இவ்வளவு குறைந்த செலவில் நிர்மாணிக்கமுடியுமென்றல் Google இற்கு போட்டியாக ஏன் யாருமே இறங்கவில்லை அல்லது தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. பிரஞ்சு அரசு 2018 இல் ஒரு அறிவித்தல் செய்தது. அரச நிறுவனங்கள் சார்ந்த எல்லா தேடல்களும் தேடல் யந்திரமான Qwant என்ற தளத்தின் மூலமாகவே செய்யப்படல் வேண்டும் என்பதுதான் அந்த அறிவித்தல். சுமார் 1 சதவீதமானவர் மட்டுமே அதை இப்போது பயன்படுத்துகிறார்கள். ஏனையோர்? ஆமாம். Google ஐத்தான் பயன்படுத்துகிறார்கள். இன்று உலகில் 90 சதவீதமானோர் பயன்படுத்தும் தேடல் இயந்திரம் Google. Microsoft இன் Bing இன் சந்தைப்பங்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே. Yahoo வின் சந்தைப்பங்கு 1.64 சதவீதம். Google உச்சத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் Google வழங்கும் சேவையின் சிறப்பு என்பதுதான்.
இதைத்தவிர Google இற்கு இருக்கக் கூடிய அனுகூலங்கள் எவை?
இன்றைய பெரும்பான்மை mobile உபகரணங்களில் Google app -default என்ற முறையில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. Apple உபகரணங்கள் வெளிவரும்போது Google search app default ஆக அதில் இணைக்கப்படுவதற்கு Google, Apple இற்கு வருடாந்தம் 800 தொடக்கம் 1200 கோடி டாலர்கள் வரை கொடுக்கிறது. அதேநேரத்தில் உலகில் 3/4 பங்கு மொபைல் போன்கள் Android முறையில் அமைந்தவை என்ற வகையில் அதில் உள்ள Chrome browser , Google search engine மூலமாகவே இயங்குகிறது. இந்த அளவில் உபகரணங்களுக்குள் நுழைந்துவிட்ட, அதற்காக பலகோடி டாலர்களை வருடாந்தம் செலவிடும் தேடல் இயந்திரமான Google இற்கு போட்டியாக நுழையக்கூடியவர் யார் என்ற கேள்வி எழுகிறது.

Google இற்கு போட்டியாக ஆஸ்திரேலியாவில் ஒரு தேடல் இயந்திரத்தை நிர்மாணிப்பது சாத்தியமா?
DuckDuckGo போன்ற பிரபலமில்லாத தேடல் தளங்கள் Microsoft இன் Bing தளத்துடன் இணைந்து data tracking மற்றும் indexing எனபவற்றில் ஒன்றுக்கொன்று அனுசரணையாக செயல்படுகின்றன. இந்த மாதிரியான ஏற்பாடு ஒன்றுடன் ஆஸ்திரேலியா களமிறங்கக்கூடும். ஆனால் Microsoft இன் கட்டுப்பாட்டிலேயே இது இயங்கக்கூடும். எது எப்படியிருந்த போதும் Google உடன் போட்டிபோடுவது என்பது புத்திசாலித்தனமான காரியமில்லை என்றே இந்த துறையிலுள்ளவர்கள் சொல்கிறார்கள்.
