Google தனது ‘search engine’தேடுதல் இயந்திரத்தை அல்லது தேடுதல் தளத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து அகற்றப்போவதாக அச்சுறுத்தி வருவதாக செய்திகள் சொல்கின்றன.
இதை அச்சுறுத்தல் என்று சொல்வதைவிட எச்சரிக்கை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். Media law - பொதுசன ஊடகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், Google, Facebook போன்ற நிறுவனங்கள், ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணத்தைக்கொடுக்கவேண்டி வரும் என்றும், அப்படி நேர்ந்தால், Google ஆல் இங்கு வெற்றிகரமாக இயங்கமுடியாது என்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸீலாந்து நாடுகளுக்கான Google இன் பிராந்திய தலைவர் Mel Silva கடந்த வாரம் செனட்சபை விசாரணை ஒன்றின்போது தெரிவித்தார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், Google search engine ஐப் பொறுத்த அளவில், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதைத்தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு Google, Facebook போன்ற நிறுவனங்கள் பணம் கொடுக்கவேண்டும் என்ற சட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது?
Google இல் பலரும் பல விடயங்களைத்தேடுவது போலவே செய்திகளையும் தேடுகிறார்கள். அப்படி செய்திகளைத் தேடும்போது, Google இங்குள்ள ஊடக நிறுவனங்களின் இணய தளத்தை link செய்கிறது. உதாரணமாக Channel 9, Channel 7, ABC, SBS, News Ltd, Fairfax, Guardian, தனியார் வானொலி நிலையங்கள் என்பவற்றின் இணய தளங்களை Google தொடர்பு படுத்துகிறது.
Google தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க, இங்குள்ள ஊடக நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திக்கொள்கிறது அல்லது திருடிக்கொள்கிறது என்பது மட்டுமல்ல கோடிக்கணக்கான பணத்தையும் விளம்பரங்கள் மூலமாக சம்பாதித்துக் கொள்கிறது என்பதே குற்றச்சாட்டாக இருக்கிறது.
உள்ளூர் ஊடக நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இப்போது அரசு இந்த Media Law என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இதன்படி, Google, Facebook போன்ற நிறுவனங்கள், உள்ளூர் ஊடக நிறுவனங்களின் செய்திச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ள, கட்டணம் அறவிடப்படும்; அந்த கட்டணம் எவ்வளவு என்பதை சம்பந்தப்பட்ட ஊடகநிறுவனங்களும் Google உம் இணைந்து தீர்மானித்துக்கொள்ளலாம். அப்படி தீர்மானித்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால், அரசே கட்டணத்தைத் தீர்மானிக்கும் என்பது Google இற்கு ஏற்புடையதாக இல்லை. ‘உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்பதை நாங்களே தீர்மானிப்போம்’ என்கிறது Google.

ஆகவே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், Google search engine ஐ ஆஸ்திரேலியாவிலிருந்து அகற்றுவதைத் தவிர வழியில்லை என்கிறது Google.
அத்தோடு, இணையதளங்களுக்கிடையே கட்டுப்பாடில்லாத தொடர்பு இருப்பதே வலைதள இயக்கத்தின் அடிப்படை என்றும், Google மற்றும் Facebook தனது வாடிக்கையாளர்களை உள்ளூர் ஊடக இணைய தளங்களுடன் தொடர்பு படுத்துவதால், உள்ளூர் இணயதளங்களுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதாகவும் இதனால் , உள்ளூர் ஊடக இணைய தளங்கள் விளம்பர ரீதியாக நன்மையடைகின்றன என்பதும் Google முன்வைக்கும் வாதமாகும்.
இதே போல Facebook உம், இந்த புதிய சட்டம் அமுலுக்கு வந்தால், தமது வாடிக்கையாளர்கள் news link என்ற செய்தி இணைப்புக்களை Facebook இல் post செய்வதற்கு தடை விதிக்கும் என்று அறிவித்திருக்கிறது.
உள்ளூர் ஊடக நிறுவனங்களின் கோரிக்கை எந்த அளவில் நியாயமானது?
இணைய தளங்களின் செல்வாக்கு காரணமாக குறிப்பாக Google, Facebook போன்ற தளங்கள் காரணமாக, இன்று உள்ளூர் ஊடக நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்கள் மூலமாகவே ஊடக நிறுவனங்கள் வருமானம் பெற முடியும். தொலைக்காட்சி நிலையங்களின் விளம்பர வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

OTT மற்றும் streaming தளங்கள் பிரபலமாகிவருவதால் பெருமளவு விளம்பரங்கள் அங்கு போய்ச்சேருகின்றன. அதேபோல print media என்ற பத்திரிகைகளும் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் விளம்பர வருமானத்தில் ஏற்பட்டுள்ள பெரு வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. வானொலி விளம்பரங்களில் எதிர்வரும் வருடங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
செய்திகளைத் திரட்டவும், வழங்கவும் பெரும் நிதியை இந்த நிறுவனங்கள் செலவு செய்யும் நிலையில் அந்தச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் உள்ளூர் ஊடக நிறுவனங்கள் திண்டாடுகின்றன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன அல்லது downsizing என்ற முறையில் செயல்பாடுகளைச் சுருக்கிக் கொண்டுள்ளன.
ஆகவே தமது செய்திச் சேவையைப் பயன்படுத்தும் Google அதற்கான கட்டணத்தை முறைப்படி தந்தால் ஒழிய, நாம் செயல்படமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக நிறுவனங்கள் பல வருடங்களாக கூறி வருகின்றன. இது நியாயமான கோரிக்கை என்ற அளவில் அரசு இதற்கான சட்ட வரைவுகளை முன்வைத்திருக்கிறது.
இது போன்ற கோரிக்கைகள் பல நாடுகளிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரேஸில், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் Google மற்றும் Facebook போன்ற நிறுவனங்கள் இதே நிலைமையைச் சந்தித்து வருகின்றன.

இதே பிரச்சனை காரணமாக ஸ்பெயினில், Google தனது news aggregation என்ற செய்தி தளங்களை link செய்வதை 2014 இல் நிறுத்திவிட்டது. பிரான்ஸில் இப்போது ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
அமெரிக்கவில் இதுதொடர்பாகவும் மற்றும் தனது search engine மூலமாக தனது மற்றைய சேவைகளை விரிவுபடுத்துகிறது; போட்டியாளர்களை ஒழித்துவருகிறது என்ற குற்றச்சாட்டின் பேரிலும் பல வழக்குகளைச் சந்தித்து வருகிறது.
உலகம் பூராவும் Google இதே சூழ்நிலையைச் சந்தித்து வரும் போது, ‘நாங்கள் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறிவிடுவோம்’ என்று Google நம்மை blackmail செய்வது விநோதமாகவே இருப்பதாக செனட்டர் Andrew Bragg செனட் விசாரணையின் போது தெரிவித்தார். அதேபோல ‘நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்க்கமாட்டோம்; எங்கள் சட்டத்திற்கு அமையத்தான், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு செயல்பட முடியும்’ என்று பிரதமர் Scott Morrison தெரிவித்திருக்கிறார்.
Google வெளியேறினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?
இன்று Google பிரபலமான search engine என்ற வகையில் 94 சதவீதமான தேடல்கள் அதன் மூலமாகவே இங்கு நிகழ்கிறது. இந்த தேடல்கள் மூலமாக ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை பெரிதும் நன்மையடைகிறது .
வியாபார நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவும், சேவை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபாரத்தைப்பெருக்கவும், ஆஸ்திரேலிய உற்பத்திப்பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவதற்கும், ஆஸ்திரேலிய மென்பொருட்கள் software, உலக அளவில் பிரபலமாவதற்கும் google search பெருமளவில உதவுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Google search ஐப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பொதுமக்களின் தேவைகளுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு உதவக்கூடிய வேறு வழிகளை அரசு ஏன் ஆராய மறுக்கிறது என்று labor கட்சியின் தொலைத்தொடர்பு துறை பேச்சாளர், Michelle Rowland வினவியிருக்கிறார்.
Google வெளியேறினால், google search இன் இடத்தை, Microsoft இன் Bing, மற்றும் Yahoo, DuckDuckGo, Apple இன் Safari போன்றவை மெதுவாக பிடிக்கக்கூடும்.
Image
Google வெளியேறுமா?
2019 இல் Google search தள விளம்பரங்கள் மூலமாக மட்டும் சுமார் 500 கோடி டாலர்களை Google ஆஸ்திரேலியாவில் சம்பாதித்திருக்கிறது. இருந்த போதும் இது Google இன் உலகளாவிய வருமானத்துடன் ஒப்பிட்டால் ஒரு சிறு துளி மட்டுமே என்று சொல்லவேண்டும்.
இப்போது Google, ஆஸ்திரேலியாவின் புதிய media law வை ஏற்றுக்கொண்டால், சர்வதேசரீதியாக அதன் பெரிய சந்தைகளுக்கு இது பிழையான முன்னுதாரணம் ஆகிவிடும் என்ற அச்சம் Google இற்கு இருக்கிறது. Media law நடைமுறைக்கு வரும் பட்சத்தில், Google search ஐ முழுமையாக முடக்காமல், Google செய்திகளின் தேடல்களை மட்டும் Google நிறுத்திவிட வாய்ப்பு உண்டு. உண்மையில் சுமார் 1.25 சதவீதமான தேடல்கள் மட்டுமே செய்தி சார்ந்ததாக இருக்கிறது.
