SKIP TO MAIN CONTENT

இலங்கை அதிபர் கோட்டாபயவின் பதவி விலகல் உறுதிசெய்யப்பட்டது! போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்!!

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து அனுப்பிவைத்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

Gotabaya Rajapaksa
Source: Gotabaya Rajapaksa

1 min read

Published

Updated


Skip to article content

இதையடுத்து கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் தேதி முதல் அதிபர்  கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் செல்லுபடியாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் பதவிவிலகிய இலங்கையின் முதல் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ ஆவார்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட  இலங்கை அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்ததையடுத்து, மே மாதம் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

Anti-government protesters outside the office of Sri Lanka's prime minister in the country's capital, Colombo, on 13 July, 2022.
Anti-government protesters outside the office of Sri Lanka's prime minister in the country's capital, Colombo, on 13 July, 2022. Source: AFP, Getty

தற்போது கோட்டாபய ராஜபக்ஸவும் பதவி விலகியுள்ளதையடுத்து, இலங்கையின் தலைமைத்துவ பதவிகளிலிருந்து ராஜபக்ஸ குடும்பத்தினர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இலங்கையில் ஏற்பட்ட கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மாலைதீவுக்குத் தப்பிச்சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து நேற்றையதினம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று இரவே கோட்டாபய ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தபோதிலும், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருந்ததாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

இன்றையதினம் சபாநாயகரின் உறுதிப்படுத்தல் வெளியாகியதையடுத்து, 'கோட்டா கோ கம' என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள், தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

People throng President Gotabaya Rajapaksa’s official residence for the second day after it was stormed in Colombo, Sri Lanka, Monday, July 11, 2022.
People throng President Gotabaya Rajapaksa’s official residence for the second day after it was stormed in Colombo, Sri Lanka, July 11, 2022. Source: AAP Image/AP Photo/Eranga Jayawardena

இந்நிலையில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது வரை, அதிபரின் பொறுப்புக்களை நிறைவேற்றும் கடமை, அரசியலமைப்பிற்கு அமைய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now