இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிலையில் நாட்டின் புதிய அதிபர் தாமே என சிறிலங்கா பொதுஜனபெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெற்றியை தமது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கொண்டாட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பிலான அறிக்கை ஒன்றும் சிறிலங்கா பொதுஜனபெரமுன சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலை வகிக்கிறார்.
எனினும் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 312,722 வாக்குகளை பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ 23,261 வாக்குகளை பெற்றார்.
அதேபோல், எம்.கே.சிவாஜிலிங்கம் 6,845 வாக்குகளையும் மற்றும் ஆரியவன்ச திஸாநாயக்க 6,790 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் அதிபர் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இலங்கை நேரப்படி இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
