ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் கைத்தொலைபேசிகள், இணையத்தொடர்புடைய கருவிகள் உட்பட வேறு பலபொருட்களையும் தடைசெய்வது மற்றும் அவற்றை தேடுதல் நடத்தி சுவீகரிப்பது என்பவை தொடர்பில் Australian Border Force-அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கும் விசேட சட்டத்திருத்தமொன்றை அரசு முன்மொழிந்துள்ளது.
குடிவரவு தடுப்புமுகாம்களில் அகதிகள் மாத்திரமன்றி, பாலியல் வல்லுறவு - போதைப்பொருள் பாவனை - சிறுவர் பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் -விசா ரத்துச்செய்யப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படும்வரையில் மேற்படி தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
குறித்த நபர்கள் தடுப்புமுகாம்களுக்குள் தங்களது நடவடிக்கைகளை தொடர்வதை தடுக்கும் முகமாக இந்தப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக பதில் குடிவரவு அமைச்சர் Alan Tudge தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டங்களின்படி, குடிவரவு அமைச்சின் பொறுப்பிலுள்ள தடுப்புமுகாம்களில் தேடுதல் நடத்தவும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சுவீகரிப்பதற்கும் பொலீஸாருக்கு மாத்திரமே அதிகாரமுள்ளது.
இனிவரும்காலங்களில் இந்தத்தடுப்புமுகாம்களில் இறுக்கமான - தொடர் - நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு Australian Border Force அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்று Alan Tudge கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு இதுதொடர்பிலான சட்டத்திருத்தமொன்றைக் கொண்டுவர அரசு முயற்சித்தபோதும் லேபர்கட்சியின் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. எனினும் தற்போது நாடாளுமன்றில் இச்சட்டத்திருத்தத்திற்கான ஆதரவினைப் பெறமுடியும் என அரசு கருதுகின்றது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
