விக்டோரியாவின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான Grampians தேசியப்பூங்காவின் குன்றுப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பிரதேசத்திற்குள் சென்று புகைப்படமெடுப்பதற்கு முயற்சித்தபோது இளம் குடும்பப்பெண்ணொருவர் 80 மீற்றர் ஆழத்தில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பரிதாபமாக இறந்தவர் இந்தியாவை பூர்வீகமாகவும் மெல்பேர்னில் வாழ்ந்துவந்தவருமான இரண்டு பிள்ளைகளின் தாய் Rosy Loomba என்று தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அன்று சனிக்கிழமை Grampians பகுதிக்கு அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் Rosy Loomba சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு குன்றின் உச்சியிலுள்ள boroka lookout விளிம்பில் நின்று படமெடுப்பதற்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த இடத்துக்குள் ஆட்கள் யாரும் நுழையக்கூடாது என்று தடுப்பு வேலி அமைக்கப்பட்டு அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புகைப்படப்பிரியர்கள் எச்சரிக்கையையும் தாண்டி, அப்பகுதிக்குள் சென்று படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது பிரபலமான வித்தையாக கருதப்படுகிறது.
அதனைத் தானும் செய்வதற்கு துணிந்த Rosy Loomba முயற்சி பலிக்காமல், தனது கணவர், குழந்தைகளின் முன்னிலையில் தவறி 80 மீற்றர் - 260 அடி - ஆழத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர சேவைப்பிரிவினர் மற்றும் பொலீஸார் இணைந்து நடத்திய தேடுதலில் ஆறு மணிநேரத்தின் பின்னர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குன்றின் அடியிலிருந்த அடர்ந்த பற்றைகளுக்குள் தேடிக்கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், வீழ்ந்த இடத்திலேயே Rosy Loomba உயிரிழந்துவிட்டார் என்றும் அவசர சேவைப்பிரிவினர் தெரிவித்தனர்.
Readers seeking support can contact Lifeline on 13 11 14; or Beyond Blue on 1300 224 636; or find a Headspace centre.
