ஆஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான Great Ocean Road - Apollo Bay பிரதேசத்துக்கு பெரும் ஆபத்து எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களில் Great Ocean Road - Apollo Bay பிரதேசம் கடலரிப்புக்கு உள்ளாகி யாருமே அந்தப்பக்கம் போகமுடியாத நிலை ஏற்படலாம் என்று விக்டோரிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் Great Ocean Road - Apollo Bay-ஐ அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுவருகின்ற கடல்நீர்மட்ட உயர்வினால் Apollo Bay பிரதேசத்தை அண்மித்த நிலம் மிகவேகமாக கடலரிப்புக்கு உள்ளாகிவருகிறது என்றும் கடந்த வருடம் - 2018 - ஜூன் மாதமளவில் பெய்த கடும் மழை பாரதூரமானதும் அபாயகரமானதுமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடலரிப்பு எதிர்பார்த்திராததும் மிகப்பாரதூரமானதும் ஆகும் என்று ஒப்புக்கொண்டுள்ள அந்த ஆய்வறிக்கை, விக்டோரிய அரசு இது தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் Great Ocean Road - Apollo Bay பகுதிக்கான பிரதான வீதிகள் அடுத்த ஐந்து வருடங்களில் முற்றாகவே கடலில் அடித்து செல்லப்படலாம் என்று எச்சரித்துள்ளது.
முதலாம் உலகப்போரில் உயிரிழந்த போர்வீரர்களின் நினைவாக 1919 - 1932 காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த 234 கிலோ மீற்றர் நீளமான Great Ocean Road எனப்படுகின்ற இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலத்துக்கு வருடமொன்றுக்கு 50 லட்சம் உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
